Friday, 19 August 2016

கல்வியின் தேவையும் அதனை மக்களுக்கானதாக்கும் முறையும்!!!!!

கல்வியின் தேவையும் அதனை மக்களுக்கானதாக்கும் முறையும்!!!!!
 
நான் பல நாட்களாக எழுத நினைத்திருந்த நமது சமூக கல்வி கொள்கையை பற்றி இன்று வாட்சாட்டில் கண்ட செய்தியை இங்கே பதிவு செய்துள்ளேன்.
எங்கே ஒடி கொண்டிருக்கிறோம் என்று தெரியாமல் மக்கள் பறந்து கொண்டுள்ளனர் தான் மட்டுமே முதலில் வரவேண்டும் என்ற முதலாளித்துவ சிந்தனையில் ஓடி கொண்டிருக்கும் மக்கள் சிறிது சிந்திக்க... குழந்தையை குழந்தைகளுக்கு உரிய உரிமை அதாவது சுயமாக வளரவிடாமல் அவர்களை வெளிவுலக சிந்தனையால் நஞ்சாக்கி, அவர்களை ஒரு முதலாளித்துவ தேவைக்கான ஒரு அடிமையாக வளர்க்கப்படும் கேவலத்தை எப்படி பகுப்பது. இன்றைய இந்திய கல்வி கொள்கையானது உள்ளவர்களுக்கு ஆம் பொருளாதார ரீதியாக மக்களை பிரித்து ஏமாற்ற... மற்றவர்கள் அடிமைகளாக இருந்து சாக ... குல கல்வி உடைமை சமூகத்தில் உள்ளவர்களுக்கு உருவானது போல்... ஆங்கில காலணி ஆட்சி அவர்களுடைய தேவையான ஒரு அடிமை கூட்டத்தை உருவாக்கி மற்றவர்களை ஒடுக்கி சுரண்ட உருவான கல்வி கொள்கை... இன்றோ மோடியும் கேடிகளான ஆளும் கும்பல் உலக மேலாதிக்க அமெரிக்க ஏகாதிபத்தியம் சுரண்டி கொழுக்க மக்களை படிப்பறிவற்ற அறிவிலிகளாக்க முனைந்துள்ளதால் இந்த அரசமைப்பானது மக்களுக்கு எதிராக ஏகாதிபத்தியம் நலன் சார்ந்த இந்த பாசிஸ்ட்டுகளை குழி தோண்டி புதைப்போம் நல்ல கல்வி கொள்கையை பின்பற்றுவோம்- சி.பழனி.... இனி வாட்சாட் செய்தி கீழே:-
உலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் ?
👌பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்lதை பள்ளிக்குச் செல்லத்
தொடங்குகிறது...
😰ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல்.., இரண்டரை வயதில் ப்ரீ-கே.ஜி.., மூன்று வயதில் எல்.கே.ஜி., நான்கு வயதில் யு.கே.ஜி என்ற சித்ரவதை அங்கே இல்லை...
😢கருவறையில் இருந்து வெளியில் வந்ததுமே குடுகுடுவென ஓடிச்சென்று பள்ளியில் உட்கார்ந்து கொள்ளும் எந்த அவசரமும் அவர்களுக்கு இல்லை...
👍எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில் இருந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும் கற்கிறது. இலை உதிர்வதும், செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும் குழந்தைக்குக் கல்விதான்...
👊இவற்றில் இருந்து வேரோடு பிடுங்கி வகுப்பறைக்குள் நடுவதால், அறிவு அதிவேக வளர்ச்சி அடையும் என எண்ணுவது மூடநம்பிக்கை...
👏ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை...
👌ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவு தான். அந்த நேரத்திலும்கூட, படிப்புக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இசை, ஓவியம், விளையாட்டு, மற்றும் பிற கலைகளுக்கும் முக்கியத்துவம் உண்டு...
👍 ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் ஓய்வறை இருக்கும். படிக்கப் பிடிக்கவில்லை அல்லது சோர்வாக இருக்கிறது என்றால், மாணவர்கள் அங்கு சென்று ஓய்வு எடுக்கலாம்...
👌முக்கியமாக, 13 வயது வரை ரேங்கிங் என்ற தரம் பிரிக்கும் கலாசாரம் கிடையாது...
பிராக்ரசு ரிப்போர்ட் தந்து பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லும் வன்முறை கிடையாது...
👊தங்கள் பிள்ளையின் கற்றல் திறன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள் விரும்பினால், தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம்...
👌கற்றலில் போட்டி கிடையாது என்பதால், தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மன உளைச்சல்கள் மாணவர்களுக்கு இல்லை...
💪சக மாணவர்களைப் போட்டியாளர்களாகக் கருதும் மனப்பாங்கும் இல்லை...
👏இவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப்படுவது இல்லை...
👌மாணவர்களுக்கு எந்தப் பாடம் பிடிக்கிறதோ அதில் இருந்து அவர்களே வீட்டுப்பாடம் செய்து வரலாம்...
👍ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர் இருப்பார். அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள் வழங்குவார்...
👌ஒரு பள்ளியில் அதிகபட்சமாக 600 மாணவர்கள் இருக்கலாம்; அதற்கு அதிக எண்ணிக்கை கூடவே கூடாது...
👍முக்கியமாக பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடமே கிடையாது. அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின் வசம்...
👏கோடீசுவரராக இருந்தாலும், நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும்… அனைவரின் குழந்தைகளும் ஒரே பள்ளியில்தான் படிக்க வேண்டும்...
‘என் பொண்ணு இன்டர்நேசுனல் சுகூல்ல படிக்கிறா’ என சீன் போட முடியாது...
👍அனைவருக்கும் சம தரமுள்ள கல்வி என்ற உத்தரவாதம் உள்ளது...
👌அதனால்தான் பின்லாந்தில் 99 சதவிகிதம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர்...
👊அதில் 94 சதவிகிதம் பேர் உயர்கல்விக்குச் செல்கின்றனர்... ‘டியூஷன்’என்ற அருவருப்பான கலாசாரம், அந்த நாட்டுக்கு அறிமுகமே இல்லை...
👍தேர்வுகளை அடிப்படை முறைகளாக இல்லாத இந்தக் கல்வி முறையில் பயின்றுவரும் மாணவர்கள்தான், உலகளாவிய அளவில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றனர்...
😳"இது எப்படி?" என்பது கல்வியாளர்களுக்கே புரியாத புதிர்...
அந்தப் புதிருக்கான விடையை, ஐ.நா சபையின் ஆய்வு முடிவு அவிழ்த்தது...
😀உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய தரவரிசை ஆய்வு ஒன்றை, ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடுகிறது. இதில் பின்லாந்து எப்போதும் முன்னணியில் இருக்கிறது...
👌மகிழ்ச்சியின் நறுமணத்தில் திளைக்கும் குழந்தைகள், அறிவை ஆர்வத்துடன் சுவைப்பதில் புதிர் எதுவும் இல்லை...
👍பின்லாந்து கல்வி முறையின் இத்தகைய சிறப்புகள் குறித்து அறிந்து வருவதற்காக, உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களும், பிரதிநிதிகளும் அந்த நாட்டை நோக்கிக் குவிகின்றனர்...
👍உலகின் 56 நாடுகளில் இருந்து 15,000 பிரதிநிதிகள் ஒவ்வோர் ஆண்டும் செல்கின்றனர்...
👍நாட்டின் அந்நியச் செலாவணியில் கணிசமான சதவிகிதம் கல்விச் சுற்றுலாவின் மூலமே வருகிறது...
👊ஆனால், இப்படி தங்களை நோக்கி வீசப்படும் புகழ்மாலைகளை பின்லாந்தின் கல்வியாளர்களும் அமைச்சர்களும் ஓடோடி வந்து ஏந்திக்கொள்வது இல்லை...
அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், "‘பின்லாந்து கல்வி முறைதான் (Finnish Education system) உலகிலேயே சிறந்தது எனச் சொல்ல முடியாது... ஏனெனில் "OCED" அமைப்பின் ஆய்வில் எல்லா உலக நாடுகளும் பங்கேற்காத நிலையில் இப்படி ஒரு முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது...
எங்களைவிட சிறந்த கல்விமுறையும் இருக்க வாய்ப்பு உள்ளது"’ என்கிறார்கள்...
👏இல்லாத நாற்காலியைத் தேடி எடுத்து ஏறி அமர்ந்து, தனக்குத்தானே முடிசூட்டிக்கொள்ளும் தற்பெருமையாளர்கள் நிறைந்த உலகத்தில் இது பண்புமிக்க பார்வை...
👏மதிக்கத்தக்க மனநிலை.
👍பின்லாந்தில் ஆசிரியர் பணி என்பது, நம் ஊர் ஐ.ஏ.எஸ் ., ஐ.பி.எஸ் போல மிகுந்த சமூகக் கௌரவம் உடையது...
👌அரசின் கொள்கை வகுக்கும் முடிவுகளில், திட்டங்களின் செயலாக்கத்தில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு...
👍மூன்றில் ஒரு பின்லாந்து குழந்தைக்கு, ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ் நாள் லட்சியம்...
அதே நேரம் அங்கு ஆசிரியர் ஆவது அத்தனை சுலபம் அல்ல!..
👌மேல்நிலை வகுப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களில் இருந்து ஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்...
👌ஐந்து ஆண்டுகள் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்து கடும் பயிற்சி எடுக்க வேண்டும்...
👌பிறகு, ஆறு மாத காலம் ராணுவப் பயிற்சி...
👌ஒரு வருடத்துக்கு வெவ்வேறு பள்ளிகளில் நேரடியாக வகுப்பறையில் ஆசிரியர் பயிற்சி...
👌ஏதாவது ஒரு பாடத்தில் புராசெக்ட்...
குழந்தை உரிமைப் பயிலரங்கங்களில் பங்கேற்பது...
நாட்டின் சட்டத் திட்டங்கள் குறித்த தெளிவுக்காக தேசிய அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ்...
தீயணைப்பு, தற்காப்புப் பயிற்சி, முதலுதவி செய்வதற்கான மருத்துவச் சான்று… என ஆசிரியர் பயிற்சிக்கு சுமார் ஏழு வருடங்களைச் செலவிட வேண்டும்...
👍இப்படி ஆசிரியர்களை உருவாக்கும் விதத்தில் பின்லாந்து மேற்கொள்ளும் சமரசம் இல்லாத முயற்சிகள்தான், அங்கு கல்வியில் மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறது!...
👏👏👏👏👏👏👏👏
இப்போது நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய தருணம் இது...
பெற்றோர்கள், கல்வியாளர்கள், கல்வி நிறுவனங்கள், ஆட்சியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது...
குழந்தைகள் வளர்ப்பில் நாம் தான் கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம் இருக்கிறது...
முதலில், பிள்ளைகளுக்கு நல்ல சிந்தனைகளை ஏற்படுத்துங்கள்!...
ஒரு குழந்தையைவிட நாம் உயர்ந்தவர் என்று நினைக்காதீர்கள்….
01. பிள்ளைகள் எதாவது செய்தால் எப்போதும் குறை கூறுதல், அவர்கள் பாராட்டும்படி செய்தாலும் கண்டு கொள்ளாதிருத்தல் போன்ற செயல்களை பலர் செய்கிறார்கள் இதனால் பிள்ளைகளின் மன வளர்ச்சி குன்றும்.
02. எந்தக் குழந்தையும் பின்னால் எப்படி ஆகுமென எவருமே கூற முடியாது. மூடன், அறிவாளியாகலாம்... பைத்தியம், தெளிந்த சித்தமுடையவனாகலாம்... ஆகவே பிள்ளைகளை ஒருகாலமும் தப்பாக மட்டும்கட்டி அலட்சியம் செய்யக் கூடாது.
03. தாமஸ் ஆல்வா எடிசனை மரமண்டை என்று பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டவர் பின்னாளில் ஆயிரம் கண்டு பிடிப்புக்களுக்கு அவரே அதிபதி.
04. லூயி பாஸ்டியர் சராசரி மாணவனாக பாடசாலையில் இருந்தவர் பின்னாளில் நோபல் பரிசு வாங்கினார்.
05. ஆல்பிரட் ஐன்ஸ்டைனை, அவர் ஆசிரியர், "இவனை போன்ற மூளை அழுகிய மாணவனை நான் பார்த்ததே இல்லை" என்றார் அவர் ஆசிரியர் ஆனால் அவரே 20 ம் நூற்றாண்டின் அதி சிறந்த விஞ்ஞானியானார்.
06. குழந்தைகளுடன் ஒரு நாளில் சிறிது நேரமாவது பேசுங்கள், நல்லதைப் பேசுங்கள் கனிவுடன் பேசுங்கள். அவர்கள் குறைகளைப் பற்றி அதிக நேரம் பேசாதீர்கள் நிறைகளை பற்றிப் பேசுங்கள்.
07. பிள்ளைகளுடன் யாரையும் ஒப்பிட்டு பேசாதீர்கள், அவன் அவனே.. நீங்கள் நீங்களே.. நீங்களே முன்னுதாரணமாக இருங்கள். உங்களைப் பார்த்து அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.
08. வாழ்வில் வெற்றிபெற்றவரைப்பற்றி பேசுங்கள், ஒவ்வொரு துறையிலும் சிறந்தவர்களைப்பற்றி பேசுங்கள்.
09. எப்படி இருக்கக் கூடாது என்று ஒப்பிட்டு பேசுவதைவிட எப்படி இருக்க வேண்டுமென ஒரு முன்னுதாரண மனிதரைப்பற்றிப் பேசுங்கள்.
10. பிள்ளைகளுக்கு வீட்டுக்குள் விலங்கிடாதீர்கள் வீடு ஒரு சிறைச்சாலைக் கூடமல்ல மனிதர்களை தோற்றுவிக்கும் கோயில்.
11. நல்ல மேற்கோள்களை கொடுங்கள், சுதந்திரம் கொடுத்து, கட்டாயப்படுத்தி வழிக்குக் கொண்டு வாருங்கள்.
12. மலர் தூவியுள்ள பாதையைப்பற்றி பிள்ளைகளுக்கு சொன்னால் அவர்கள் முள் நிறைந்த பாதையை புரிந்து கொள்வார்கள்.
13. உழைப்பைப்பற்றி சொல்லிக் கொடுங்கள் அவர்கள் உழைப்பில்லாத கேடுகளை புரிந்துகொள்வார்கள்.
14. வெற்றி பெற்றவர்களை சொல்லும்போது தோல்வியின் காரணங்களை அவன் அறிந்து கொள்வான்.
15. சுறு சுறுப்பை சொல்லிக் கொடுத்தால் அவன் சோம்பலை அடையாளம் காண்பான், விதியை வென்றவர்களை சொல்லும்போது அவன் வேதனையில் நொந்து அழிந்தவர்களை கண்டு கொள்வான் – இது போதும்...
முதலில் நாம் மாற வேண்டும்.
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு...
மாற்றம் ஒன்றே மாறாதது...
நல்ல மாற்றம் தான் வளர்ச்சியை தரும்.
பின்லாந்தின் கல்விமுறையிலிருந்து நாம் கற்றுக் கொண்டு மாறுவோம்!.
குழந்தைகளின் எதிர்காலத்தைப் சிறப்பாக மாற்றுவோம்!.

சமூக நீதியை மறுக்கும் கல்விக் கொள்கை!

சமூக நீதியை மறுக்கும் கல்விக் கொள்கை!


நம் கல்வி... நம் உரிமை! - 2

*
ஒரு தேசத்தின் எதிர்காலம் அதன் கல்விச்சாலைகளிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு அரசு முன்வைக்கும் கல்விக் கொள்கையின் மீதே அந்த எதிர்காலம் கட்டமைக்கப்படுகிறது. மோடி அரசு கொண்டுவரவிருக்கும் புதிய கல்விக் கொள்கையின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்திருக்கும் ‘தி இந்து’, இது தொடர்பிலான விவாதத்தை நம்முடைய பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் என அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் கொண்டுசெல்ல வேண்டியதன் பொறுப்பையும் உணர்ந்திருக்கிறது. இதன் நிமித்தம் இந்த வாரம் முழுவதும் நடுப்பக்கத்தில் இது தொடர்பிலான கல்வியாளர்களின் கட்டுரைகள், பேட்டிகள் வெளியாகவிருக்கின்றன. தொடக்கக் கல்வியில் புதிய கல்விக் கொள்கை ஏற்படுத்தப்போகும் தாக்கம் பற்றி இன்றைக்குப் பார்ப்போம்.
புதிய கல்விக் கொள்கையைக் கொண்டுவரும் முயற்சியில் முனைப்புடன் ஈடுபட்டிருக்கிறது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு. மாநிலங்களவையில் புதிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. பாஜக அரசின் இந்த முயற்சி, குழந்தைகளின் கல்வியில் முன்னேற்றத்துக்கு வழிவகுப்பதற்குப் பதிலாக, ஏற்றத்தாழ்வு மிக்க கல்வி முறைக்கே வழிவகுக்கும் என்ற அச்சம் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் விமர்சனங்களை மத்திய அரசு புறந்தள்ளிவருகிறது.
“தரம், ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையிலேயே புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. சிலர் குற்றம்சாட்டுவதுபோல் அரசமைப்புச் சட்டத்துக்கு முரணான எந்த அம்சமும் இந்த கல்விக் கொள்கையில் இல்லை” என்று விளக்கம் தந்திருக்கிறார் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.
உண்மையில், இந்தப் புதிய கல்விக் கொள்கை என்னதான் சொல்கிறது?
நியாயமற்ற மாற்றங்கள்
மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள ‘தேசியக் கல்விக் கொள்கை 2016 வரைவுக்கான சில உள்ளீடுகள்’ எனும் ஆவணம் கல்வியின் பொருளையும் வரையறையையும் மாற்றுகிறது. கல்வி என்பதே வேலைவாய்ப்புக்கான திறன் வளர்ச்சி, வாழ்வாதாரத்தைத் தேடுவதற்கான திறன் வளர்ச்சி என்கிறது இந்த ஆவணம். அதுமட்டுமல்லாமல், குழந்தைப் பருவத்தின் காலத்தை 14-ஆகக் குறைத்து 15 வயதுக்கு மேற்பட்டோரைப் பெரியவர்கள் என அறிவிக்கிறது. குழந்தைத் தொழிலை அங்கீகரிக்கும் விதமாக குழந்தைத் தொழிலாளர்களுக்குத் திறந்த வெளிப் பள்ளி என்கிறது. வேலைக்குச் செல்லும் குழந்தைகள் பள்ளிக்கு வராமலேயே படிக்கலாம் என்கிறது. அத்தனை எளிதாக எடுத்துக்கொள்ள முடியுமா இந்த மாற்றங்களை?
கல்வி என்பது குழந்தைகளின் பிறப்புரிமை. இந்திய அரசமைப்புச் சட்டம் தொடக்கக் கல்வியை அடிப்படை உரிமையாக்கியுள்ளது. இந்நிலையில், தொழிலில் ஈடுபடும் குழந்தை களை மீட்டுப் பள்ளியில் சேர்க்க வேண்டிய அரசு, அவர்கள் பள்ளிக்கு வராமலேயே படிக்கலாம் என்று சொல்வது ஏற்றுக்கொள்ளவே முடியாதது. மேலும், தொடக்கக் கல்வி அனைத்துக் குழந்தைகளுக்கும் சமமாகக் கிடைக்காது என்பது எவ்வாறு ஒரு தேசத்தின் கொள்கையாக இருக்க முடியும்?
கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து, வாய்ப்பு மறுக்கப்பட்ட, குடிபெயர்ந்து வாழும் குடும்பங்களைச் சேர்ந்த, இக்கட்டான சூழலில் வாழ்கின்ற குழந்தைகளுக்கு மாற்றுப் பள்ளி மூலம் கல்வியில் தலையீடுகள் செய்யப்படும் என்று சொல்வது ‘சமவாய்ப்பு’ என்ற அரசமைப்புச் சட்ட அடிப்படை உரிமைக்கு எதிரானது. நாட்டின் 70-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில், சமூகத்தின் கடைக்கோடிக் குடிமகனுக்கு, அனைவருக்குமான பள்ளி கிடையாது என்பது சகித்துக்கொள்ள இயலாத கொள்கை முன்மொழிவு.
முன்னோடிகளின் முயற்சிகள்
ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளில், கல்வியில் பலவீனமாக உள்ளவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தொழில்பயிற்சி அளிக்கப்படும் என்கிறது இந்த ஆவணம். ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாயக் கல்வி என்பது விடுதலைக்கு முன்னும், விடுதலைக்குப் பின்னும் இந்தியாவில் நடைமுறையில் இருந்துவந்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் 1920-ல் இயற்றப்பட்ட சட்டம் அதை உறுதிப்படுத்தியது.
அரசிடம் பணமே இல்லை என்றாலும், அரசுதான் தொடக்கக் கல்வியைத் தர வேண்டும் என்பதில் உறுதி யுடன் இருந்தார் காமராஜர். அயோத்திதாசர் கர்னல் ஆல்காட்டுடன் இணைந்து ஒதுக்கப்பட்டோர் கல்வி பயிலப் பள்ளி திறந்தார். கேரளாவில் அய்யங்காளி தனது பெரு முயற்சியால், தாழ்த்தப்பட்ட, ஏழைக் குழந்தைகளுக்காகப் பள்ளிகள் திறக்கச் செய்தார். இப்படி எத்தனையோ முன்னோடிகள், குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய தொலைநோக்குடன் செயல்பட்டிருக்கிறார்கள்.
இரண்டு நூற்றாண்டு சமூக நீதியின் பயனாகக் கிடைத்திருக்கும் தொடக்கக் கல்வியை, எதிர்காலத்தில் அனைத்துக் குழந்தைகளும் முழுமையாகப் பெற இயலாத நிலையை உருவாக்கும் முயற்சியாகத்தான் மத்திய அரசு கொண்டுவர நினைக்கும் புதிய கல்விக் கொள்கையைப் பார்க்க முடிகிறது.
முடிவுசெய்வது யார்?
புதிய கல்விக் கொள்கை மூலம் பத்தாம் வகுப்பில் பிரிவு ‘அ’, பிரிவு ‘ஆ’ என இரண்டு தேர்வு முறைகளைக் கொண்டுவரத் திட்டமிடுகிறது மத்திய அரசு. பல்வேறு விதமான சமூக, பொருளாதாரப் பின்னணியில் இருந்து வந்து, பல தடைகளைக் கடந்து இடைநிலைக்கு வரும் மாணவர்களை உயர் கல்வி தொடர விடாமல் செய்யும் சூழ்ச்சி இது.
எந்த மாணவர் உயர் கல்வியில் கணிதம், ஆங்கிலம் தொடர்ந்து படிக்கப்போவதில்லையோ, அவர் பிரிவு ‘ஆ’வைத் தேர்வு செய்துகொள்ளலாம். மற்றவர்கள் பிரிவு ‘அ’ வைத் தேர்வுசெய்வார்கள் என்கிறது புதிய கல்விக் கொள்கை ஆவணம். அதாவது, பிரிவு ‘ஆ’வைத் தேர்வு செய்பவர்கள் உயர் கல்வியில் கணிதம், அறிவியல் படிக்க இயலாது. 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 14 வயதுதான் ஆகியிருக்கும். இந்த வயதில் உயர் கல்வியில் என்ன படிக்கப்போகிறோம் என்பதை அவர்களால் எவ்வாறு தீர்மானிக்க முடியும்? மாணவர்களை 10-ம் வகுப்பிலேயே கணிதம், அறிவியல் போன்ற பாடங்களை உயர் கல்வியில் படிக்கத் தகுதியற்றவர்களாக்கும் கல்விக் கொள்கை முற்போக்கானதா? பிற்போக்கானதா?
இவ்வளவு வடிகட்டலுக்குப் பிறகு, மிச்சம் மீதி இருக்கும் 10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள், தேசிய அளவில் நடத்தப்படும் திறன் அறியும் தேர்வில் பங்கேற்று, அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்குத் தகுதி அடிப்படையில் கல்வி உதவித்தொகை என்கிறது இந்த ஆவணம்.
ஒரே பாடத்திட்டம்
தேசிய அளவில் கணிதம், அறிவியல் பாடங்களுக்கு ஒரே பாடத்திட்டம் என்கிறது இந்த ஆவணம். இது சாத்தியமற்றது. கணிதத்திலோ, அறிவியலிலோ குறிப்பிட்ட கோட்பாட்டை, ஒரு மாணவர் குறிப்பிட்ட வகுப்பில் அறிந்திருக்க வேண்டும் என்று அறிவித்துவிட்டால், அந்தக் கோட்பாட்டை மாணவர்க ளுக்கு எவ்வகையில் வழங்கலாம் என்பதை மாநில அளவில் வகுக்கப்படும் பாடத்திட்டம் தீர்மானிக்கும். மண் சார்ந்து, மக்கள் சார்ந்துதான் கணிதம், அறிவியல் போன்ற பாடங்கள் உருப்பெறுகின்றன; வளர்கின்றன. ஒரே மாதிரி யான பாடத்திட்டத்தை இந்தியா போன்ற பன்முகப் பண்பாட்டை, பல தேசிய இனங்களைக் கொண்ட நாட்டில் புகுத்த முடியாது; புகுத்தவும் கூடாது.
அந்தந்த மாநிலத்தின் ஆசிரியர்கள்தான் அந்தந்த மாநிலத்தில் பாடத்திட்டத்தை உருவாக்க முடியும். சம்பந்தமே இல்லாமல் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து சிலர் தயாரிக்கும் பாடத்திட்டத்தை அனைத்து ஆசிரியர்களும் நடத்த வேண்டும் என்பது ஆசிரியர்களைப் பாடத்திட்ட உருவாக்கத்திலிருந்து விலக்கி வைப்பதாகும். மாணவர்களின் சமூக, பொருளாதாரப் பின்னணியையும், அவர்களின் புரிதல் திறனையும் அறிந்தவர்களே உள்ளூர் அளவில் பாடத்திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் எனும் அக்கறையான குரல்கள் எழுந்திருக்கும் காலத்தில், மாநில அளவில்கூடப் பாடத்திட்டம் தயாரிக்கப்படாது; தேசிய அளவில்தான் அது இருக்கும் என்பது நிச்சயம் மாணவர்களின் நலன் சார்ந்தது அல்ல.
அப்படியே தேசிய அளவில் கல்விக் கொள்கை உருவானாலும், மொழி, கல்வி ஆகியவற்றில் கொள்கை முடிவு எடுக்கும் அதிகாரத்தை மாநில அரசிடமிருந்து பறிக்கக் கூடாது. பாடத்திட்டம் மாநில அரசால் உருவாக்கப்பட வேண்டும்.
18 வயதுக்கு உட்பட்டவர் அனைவரும் குழந்தைகள் என்பதை ஏற்று, குழந்தைப் பருவத்தில் அனைவரும் கல்வி கற்க பள்ளி செல்வதை உறுதிப்படுத்த வேண்டும். குழந்தைத் தொழிலாளர் முறை தேசத்தின் அவமானம். குழந்தைகள் தொழிலாளர் ஆக்கப்படுவதைத் தடை செய்யும் கொள்கை வேண்டும். ஆனால், கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குழந்தைத் தொழிலாளர் (தடை செய்தல், முறைப்படுத்தல்) திருத்தச் சட்டம் நம்பிக்கையிழக்க வைத்திருக்கிறது. குழந்தைத் தொழிலாளர் முறையை மறைமுகமாக ஊக்குவிப்பதுபோல் அமைந்திருக்கிறது இந்தச் சட்டத் திருத்தம்.
அருகமைப் பள்ளி அமைப்பில், வயதுக்கேற்ற பன்மொழி கற்கும் வாய்ப்போடு கூடிய தாய்மொழி வழியில், பொதுப்பள்ளி முறைமையை உருவாக்கி, அரசின் செலவிலும் பொறுப்பிலும், 18 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் மேல்நிலைப் பள்ளிக் கல்விவரை அடிப்படை உரிமையாக்கி வழங்குவது அரசின் கடமை. கற்றல் தாய் மொழியில்தான் நிகழும் என்பதால், பள்ளிக் கல்வியைத் தாய் மொழிவழியிலேயே தர வேண்டும் என சுப்பிரமணியன் குழு அறிக்கை பரிந்துரைத்திருப்பதை மறந்துவிடக் கூடாது.
கற்றல் வாய்ப்பு அனைவருக்கும் சமமாகக் கிடைக்க பொதுப் பள்ளி முறைமைதான் ஏற்றது என்பது உலக அனுபவம். இந்தியாவில் உருவான அனைத்துக் குழுக்களும் இதையே பரிந்துரைத்திருக்கின்றன. எனவே, மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து, தவறான கொள்கை முன்மொழிவுகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மக்களாட்சியின் உண்மையான அடையாளம் அதுதான்!
- பிரின்ஸ் கஜேந்திர பாபு, பொதுச் செயலாளர்,
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை
தொடர்புக்கு: spcsstn@gmail.com

புதிய கல்விக் கொள்கை: ஓர் அறிமுகம்

புதிய கல்விக் கொள்கை: ஓர் அறிமுகம்


நம் கல்வி... நம் உரிமை! - 1

*
ஒரு தேசத்தின் எதிர்காலம் அதன் கல்விச்சாலைகளிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு அரசு முன்வைக்கும் கல்விக் கொள்கையின் மீதே அந்த எதிர்காலம் கட்டமைக்கப்படுகிறது. மோடி அரசு கொண்டுவரவிருக்கும் புதிய கல்விக் கொள்கையின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்திருக்கும் ‘தி இந்து’, இது தொடர்பிலான விவாதத்தை நம்முடைய பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் என அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் கொண்டுசெல்ல வேண்டியதன் பொறுப்பையும் உணர்ந்திருக்கிறது. இதன் நிமித்தம் இந்த வாரம் முழுவதும் நடுப்பக்கத்தில் இது தொடர்பிலான கல்வியாளர்களின் கட்டுரைகள், பேட்டிகள் வெளியாகவிருக்கின்றன. இன்று பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தொடங்கி நவீன இந்தியாவில் முன்வைக்கப்பட்ட கல்விக் கொள்கைகள், அவற்றின் நோக்கங்கள், தாக்கங்களின் வரலாற்றுப் பின்னணியில் புதிய கல்விக் கொள்கையின் சுருக்கமான அறிமுகம்.
புதிய கல்விக் கொள்கைக்கான வரையறை அறிக்கை எனும் பெயரில் மத்திய அரசு வெளியிட்டிருக்கும் 43 பக்கக் கொள்கைப் பிரகடனம், கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வுகளை உருவாக்கியிருக்கிறது. பலரும் சுட்டிக்காட்டும் சம்ஸ்கிருதத் திணிப்பு என்பதையும் தாண்டி, பல்வேறு அபாயங்களை மோடி அரசின் கல்விக் கொள்கை கொண்டிருக்கிறது. புதிய கல்விக் கொள்கையை அலசும் முன்னர், இதற்கு முன்பு உருவாக்கப்பட்ட முக்கியமான கல்விக் குழுக்களைப் பார்த்துவிடலாம்.
மெக்காலேவுக்கு முன்னும் பின்னும்
1813-ல் முதன்முறையாக இந்திய மக்களுக்குக் கல்வி அளிக்கும் பொறுப்பைத் தனது பணியாக ஏற்பதாக பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. கல்வி சாசனம் எனும் ஆவணத்தையும் வெளியிட்டது. அதற்காக அன்று உடனடியாக ரூ. 1 லட்சம் ஒதுக்கப்பட்டதும், அது கிறித்துவ மிஷனரிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டதும் வரலாறு. ஆங்கிலக் கல்வியே தனது கல்வி என இந்த ஆவணம் பகிரங்கமாக அறிவித்தது. கிழக்கிந்திய கம்பெனியில் வேலை பார்க்க, இந்திய மக்களுக்குச் சாதி, மதம் உள்ளிட்ட தகுதி தேவையில்லை. பிரிட்டிஷ் கல்வி நிறுவனக் கல்வித் தகுதியின் அடிப்படையில் மட்டுமே வேலை வழங்கப்படும் என அதன் இரண்டாம் ஷரத்து குறிப்பிடுகிறது.
1834-ல் மெக்காலே இந்தியா வந்தார். அவருடன் ஆலோசனை நடத்திய கவர்னர் ஜெனரல் பெண்டிங் பிரபு, இந்தியக் கல்விக்கு - பொதுக் கற்பித்தல் முறை எனப் பெயரிட்டு, அவரையே அதன் தலைவராக்கினார். எண்ணத்திலும் அறிவாற்றலிலும் கலாச்சாரத்திலும் ஆங்கிலேயராகவும் ஆனால், ரத்தத்திலும் நிறத்திலும் இந்தியராகவும் இருக்கும் ஒருவரை உருவாக்குவதே கல்வியின் நோக்கம் என அறிவித்த மெக்காலே, 267 பக்கம் கொண்ட கல்விக் கருத்துருவை அரசுக்குச் சமர்ப்பித்தார்.
ஆங்கிலக் கல்வியை முழுதும் வேலையாள் தகுதி பெறும் கல்வியாக மாற்றினார். பிராந்திய மொழிகளில் புத்தகங்கள் அச்சிடுவதைக்கூடத் தடை செய்தார். “வியாபார, நிர்வாக மொழியாய் ஆங்கிலம்; அதற்காக பிரிட்டிஷ் அரசுக்குத் தேவைப்படும் லட்சக்கணக்கான - கணக்காளர், எழுத்தர் வேலைக்கான கல்வி ஆகியவை போதுமானவை. பெரிய மேதாவிகள், தத்துவ அறிஞர்கள் எல்லாம் நமக்கு எதற்கு?” என அவர் பகிரங்கமாக அறிவித்தார். 1835-ல் வில்லியம் பெண்டிங் பிரபு, மெக்காலே குறிப்புகளை ஏற்று முழுமையாக அமல்படுத்த உத்தரவிட்டார். பிற்காலத்தில், ‘வேலை… கும்பேனி அரசு வேலை, தனியார் ஆலை வேலை எனும் ஈர்ப்பே கல்வியின் அடிநாதமாக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி தரும் சான்றிதழ், வேலை பெறும் ஒரு அடையாளச் சீட்டாகப் பயனாகிறது’ என்று காந்தி விமர்சித்தது குறிப்பிடத் தக்கது.
1853-ல் இங்கிலாந்தின் கல்விக் கட்டுப்பாட்டுக் குழுமத்தின் தலைவராக இருந்த சார்லஸ் வுட் தலைமையில் ஒரு கல்விக் குழு இந்தியா வந்தது. 1854-ல் கர்சன் பிரபுவின் காலத்தில் இதன் அறிக்கை முன்வைக்கப்பட்டது. நமது கல்வி முறையில் இருக்கும் காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு, முழு ஆண்டுத் தேர்வு என்பதெல்லாம் இக்குழுவின் கைங்கர்யம்தான். பள்ளிக்கான சீருடை, ஒரு பாடமாகப் பிராந்திய மொழி போன்றவற்றை 1882-ல் வில்லியம் ஹண்டர் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய கல்வி கமிஷன் கொண்டுவந்தது.
டாக்டர் ராதாகிருஷ்ணன் குழு
நாடு சுதந்திரம் அடைந்த அடுத்த ஆண்டே, பல்கலைக்கழகக் கல்வியின் தரத்தை ஆராய, அப்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் சுதந்திர இந்தியாவின் முதல் கல்விக் குழுவை நியமித்தார் பிரதமர் நேரு. பிரதான பிரச்சினை பல்கலைக்கழகக் கல்வியல்ல; அனைவருக்குமான ஆரம்பக் கல்விதான் என அம்பேத்கர், மேகநாத் சாஹா, அபுல் கலாம் ஆசாத் போன்றவர்கள் அப்போதே கருத்துத் தெரிவித்தனர். ஆனால், இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவைத் தோற்றுவித்தது உட்பட, உயர் கல்வியை நிறுவனமயமாக்கி, தனியார் கல்லூரிகளை உள்ளூர்க் குழுமங்கள் உருவாக்கி, மானியக் குழுவிடம் பண உதவிபெறலாம் என்றெல்லாம் முன்மொழிந்தது டாக்டர் ராதாகிருஷ்ணன் கல்விக் குழு.
டாக்டர் லட்சுமணசாமி குழு
1952-ல் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த டாக்டர் லட்சுமணசாமி முதலியார் தலைமையில் ஒரு கல்விக் குழு அமைக்கப்பட்டது. இதில் தந்தை பெரியார், ஜி.டி.நாயுடு உட்பட பலர் நேரில் ஆஜராகி, கல்வி குறித்து விவாதித்தனர். பெண் கல்வி மேம்பட பெண்களுக்கான கல்வி நிலையங்களைத் தொடங்குதல், தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளைப் பயிற்று மொழியாக்குதல் என இரண்டு முக்கிய மாற்றங்களை இக்குழு முன் மொழிந்தது.
கோத்தாரி கல்விக் குழு
டாக்டர் டி.எஸ்.கோத்தாரி தலைமையில் நேரு உருவாக்கிய இந்தக் குழுவின் அமைப்பே வித்தியாசமாக இருந்தது. பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், கல்வியாளர்கள் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். 1964 அக்டோபர் 2-ல் தனது பணியைத் தொடங்கிய இக்குழு, 9,000 பேரிடம் கருத்தறிந்து, 2,400 பக்க அறிக்கையை 1966-ல் வழங்கியது. இந்தியக் கல்விக் குழுக்களிலேயே நமது மண்ணின் ஆதாரக் கல்வி எப்படி இருக்க வேண்டும் என்பதை மிகச் சரியாக முன்வைத்தது கோத்தாரி கல்விக் குழுதான்.
அரசு தனது ஒட்டுமொத்த உற்பத்தியில் 6%ஐக் கல்விக்கு ஒதுக்க வேண்டும் என அக்குழு பரிந்துரை செய்தது (தற்போது மோடி அரசு கல்விக்கு ஒதுக்கியிருப்பது 3.47% மட்டுமே). பொதுப் பள்ளிகளை அக்குழுதான் அறிமுகம் செய்தது. ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு ஆரம்பப் பள்ளி, 2 கிலோ மீட்டருக்கு ஒரு உயர்நிலைப் பள்ளி, 3 கிலோ மீட்டருக்கு ஒரு மேல்நிலைப் பள்ளி என கல்விச் சாலைகளைக் கட்டமைத்தது. தறிப் பயிற்சி, தோட்டக் கலை, குடிமைப் பயிற்சி ஆகியவற்றை அறிமுகம் செய்தது. விளையாட்டு, நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை இக்குழுவின் சாதனைகள். இக்கல்விக் குழுவின் பரிந்துரைகளை அரசுகள் முழுமையாக அமல்படுத்தவில்லை.
ராஜீவின் புதிய கல்விக் கொள்கை
1986-ல் புதிய கல்விக் கொள்கை எனும் பெயரில் கல்வியில் மாற்றங்களை அறிவித்தது ராஜீவ் அரசு. பெருநிறுவனங்கள் மற்றும் தொழில்துறைக்குப் பணியாளர்களை வழங்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது அது. தொழில் கல்வியே அதன் பிரதானம். முன்பு பிரிட்டிஷ்காரர்களுக்குக் கணக்காளர்களை உருவாக்கிய மெக்காலே கல்வி போலவே இந்தப் புதிய கொள்கை செயல்பட்டது. மதிப்பெண்களைத் துரத்தும் மனப்பாடக் கல்விக்கே முக்கியத்துவம் தரப்பட்டது. ஆங்கிலமே வேலைவாய்ப்பைத் தர முடியும் என்பதால், பட்டிதொட்டிகளில் எல்லாம் நர்சரிப் பள்ளிகள் முளைத்தன. பில்கேட்ஸின் பணியாட்களை உருவாக்க வடிவமைக்கப்பட்ட கல்விக் கொள்கை என்று கல்வியாளர்கள் இதை விமர்சிக்கிறார்கள்.
யஷ்பால் கல்விக் குழு
உலகம் முழுதும் கல்வி எனும் பெயரில் குழந்தைகள் வதைபடுவதைக் கடுமையாக விமர்சித்த யுனிசெஃப், யுனெஸ்கோ போன்ற ஐநா சபையின் குழந்தைகள் நல அமைப்புகள், கற்றலைச் சுமையற்றதாக்கவும் இனிமையாக் கவும் நடவடிக்கை எடுக்கக் கோரி நாடுகளை அழைத்தன.
சாதி, சமய, வர்க்க வேறுபாடுகள் இன்றி, ஒரே மாதிரிக் கல்வி எனும் நிர்ப்பந்தம் வந்தபோது 2009-ல் அமைக்கப்பட்டதுதான் பேராசிரியர் யஷ்பால் தலைமையிலான கல்விக் குழு. தேர்வுகளுக்குப் பதிலாக, மாற்றுக் கல்வித் தொடர் மற்றும் முழுமை மதிப்பீட்டை (சி.சி.இ.) இக்குழு அறிமுகம் செய்தது. எட்டாம் வகுப்பு வரை தொடர் தேர்ச்சி என்பதை இக்குழு கொண்டுவந்தது. இன்று பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேரும் 100 குழந்தைகளில் 76 பேரை எட்டாம் வகுப்பில் நம்மால் தக்கவைக்க முடிந்துள்ளது.
மோடி முன்வைக்கும் கல்விக் கொள்கை
இந்தச் சூழலில்தான் மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிடும் புதிய கல்விக் கொள்கை, பல்வேறு அச்சங்களை ஏற்படுத்தியிருக்கிறது. மெக்காலே - ராஜீவ் கல்விக் கொள்கைகளை நினைவுபடுத்தும் இக்கொள்கை, அடுத்த 20 ஆண்டுகளில் கல்வி என்னவாகும் எனும் பெருங்கவலையையும் ஏற்படுத்துகிறது. வேதகாலக் கல்வியே புனிதமானது என்றெல்லாம் சொல்வதைவிடவும், இதற்கு முன்பு யஷ்பால் குழு என்று ஒன்று இருந்ததையோ அது சுமையற்ற கற்றல் முதல், குழந்தைகள் உரிமைகளை, ஆசிரியர்களின் கடமையை உருவாக்கியதையோ கணக்கில் எடுக்கவில்லை என்பதுதான் பெரும் அதிர்ச்சி. எந்த ஒரு கல்விக் கொள்கையும் தனக்கு முன் நடந்தவற்றை, பட்டியலாகவாவது குறிப்பிட்டு அதன் தொடர்ச்சியாகத் தன்னை அறிவித்துக்கொள்ள வேண்டும் என்பதே மரபு.
இதன் முக்கிய அம்சங்கள்
1. பொருத்தமில்லாத பாடப் பொருள் மற்றும் ஊக்கமற்ற கற்பித்தல் முறை, நம் கல்வியில் முன்பிருந்த தரம் போய்விட்டது என்று சொல்லும் புதிய கல்விக் கொள்கை, இதைச் சரிசெய்ய இரண்டு வழிகளை முன்வைக்கிறது. முதலாவதாக, பழையபடி மத்தியப் பட்டியலுக்குக் கல்வி வரவேண்டும் என்கிறது. ஆனால், இது மாநிலங்களின் உரிமையைப் பறித்துவிடும் என்று குரல்கள் எழுந்திருக்கின்றன.
அடுத்து, நான்காம் வகுப்பின் முடிவிலிருந்தே தேர்ச்சி / தோல்வி என மாணவர்களைச் சலித்தெடுக்க வேண்டும் என்கிறது. இது பழையபடி பள்ளியிலிருந்து பல மாணவர்கள் வெளியேறுவதற்குத்தான் வழிவகுக்கும்.
2. திறன்களை, குறிப்பாக வேலைவாய்ப்புத் திறன்களை வளர்க்க நமது கல்வி தவறிவிட்டது; வேலைக்குத் தகுதியற்ற படித்தவர்களை உருவாக்கி வீணடித்துவிட்டது என்று சொல்லும் புதிய கொள்கை, இதைச் சரிசெய்ய திறன் மேம்பாட்டு ஆணையம் அமைத்து, பள்ளிக்கூடங்களில் தொழில்துறை தேவைகளை மனதில் வைத்து, மாணவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்க வேண்டும் என்கிறது. மேலும், கல்வி முழுமை பெறும் முன்னமே வேலைத் தகுதிச் சான்றிதழ் மூலம் (மாணவர்கள் விரும்பினால்) ஒன்பதாம் வகுப்போடு தொழில் துறையில் இணையலாம் என்கிறது. இது குலக் கல்விமுறையை நினைவுபடுத்துவதாகக் கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
3. இந்திய அளவிலான கல்வியின் தரத்தை மேம்படுத்த, கல்வி அமைப்புகள், பள்ளிகளுக்கான தரப்பட்டியல் தயாரிக்க கல்லூரி அளவிலான தரமேம்பாட்டுக் குழு போல ஒரு அமைப்பு ஏற்படுத்தப்படும். தேசிய அளவிலான பள்ளிக் கல்வி தரச்சான்று ஆணையம் என அது அழைக்கப்படும் என்கிறது இந்த அறிக்கை. இது அரசுப் பள்ளிகளை முற்றிலும் முடங்கச் செய்துவிடும் எனும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
4. ஆசிரியர்களின் தரம் - தலைமை ஆசிரியரின் தகுதி இவற்றில் எந்த சமரசத்தையும் மோடி அரசு ஏற்றுக்கொள்ளாது. இதற்காகவே திறன் சோதனைகளுக்கு அவர்கள் உட்படுத்தப்படுவார்கள் என்று சொல்லும் இந்த அறிக்கை, குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தரச்சான்றுத் தேர்வுகளை ஆசிரியர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்கிறது. ஏற்கெனவே ஆசிரியர் பயிற்சிப் பட்டப் படிப்புகளுக்கு சேர ஆள் இல்லை என்பது வேறு விஷயம்.
5. மதிய உணவுத் திட்டத்திலிருந்து ஆசிரியர்களை விடுவிக்கிறது இந்தப் புதிய கொள்கை. அதேசமயம், பள்ளிகளுக்கு அரசு நேரடியாக உணவு தராது. அதற்குப் பதிலாக அவற்றைத் தர்ம அமைப்புகளிடம் (தனியார்) ஒப்படைத்துவிடும். அரசின் நலத்திட்டத்தைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சி இது.
6. ‘இந்திய கலாச்சாரக் கூறுகளை இன்றைய கல்வி முற்றிலும் கைவிட்டு விட்டது. இதைச் சரிசெய்ய வகுப்பில் மூன்றாவது மொழியாக சம்ஸ்கிருதம் இணைக்கப்பட்டு, ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு சம்ஸ்கிருத ஆசிரியர் நியமிக்கப்படுவார்’ என்று இக்கொள்கை முன்வைக்கும் திட்டம் அப்பட்டமான காவி மயம் என்று விமர்சிக்கப்படுகிறது.
கோத்தாரிக் குழு இந்தியாவைச் சமூகம் என்று அழைத்தது. இந்த ஆவணமோ இந்தியப் பொருளாதாரம் என்றே அழைக்கிறது. கோத்தாரிக் குழு கல்வியை சேவை என்று அழைத்தது. மோடியின் புதிய கல்விக் கொள்கை ஆவணமோ கல்வியை முதலீடு என்கிறது. கூடவே ‘குருகுல’ மாதிரி என்பதை வருவாய் என்கிறது.
மெக்காலேவுக்குத் தேவைப்பட்டது பிரிட்டிஷ் காலக் கணக்காளர்கள்; ராஜீவ் காந்திக்குத் தேவைப்பட்டது பில்கேட்ஸின் வேலையாட்கள்; மோடியின் தேவை மேலும் மாறுபட்டது. அவ்வளவே. கடந்த பல பத்தாண்டுகளில் கடும் போராட்டங்கள், சோதனைகளுக்கிடையில் உரு வான ஏகலைவர்களின் கட்டை விரல்களைத் துண் டாடிய குருதியில்தான் இக்கல்விக் கொள்கை எழுதப் பட்டுள்ளது.
ஆயிஷா இரா.நடராஜன், கல்வியாளர்
தொடர்புக்கு: eranatarasan@yahoo.com
Keywords: புதிய கல்விக் கொள்கைஓர் அறிமுகம்

நம் கல்வி... நம் உரிமை!- என்னவாகும் உயர்கல்வியின் எதிர்காலம்?

நம் கல்வி... நம் உரிமை!- என்னவாகும் உயர்கல்வியின் எதிர்காலம்?


ஒரு தேசத்தின் எதிர்காலம் அதன் கல்விச்சாலைகளிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு அரசு முன்வைக்கும் கல்விக் கொள்கையின் மீதே அந்த எதிர்காலம் கட்டமைக்கப்படுகிறது. மோடி அரசு கொண்டுவரவிருக்கும் புதிய கல்விக் கொள்கையின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்திருக்கும் ‘தி இந்து’, இது தொடர்பிலான விவாதத்தை நம்முடைய பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் என அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் கொண்டுசெல்ல வேண்டியதன் பொறுப்பையும் உணர்ந்திருக்கிறது. இதன் நிமித்தம் இந்த வாரம் முழுவதும் நடுப்பக்கத்தில் இது தொடர்பிலான கல்வியாளர்களின் கட்டுரைகள், பேட்டிகள் வெளியாகின்றன. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, உயர்கல்வியில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் பற்றி இன்றைக்குப் பார்ப்போம்.
உலகின் மூன்றாவது பெரிய உயர் கல்விக் கட்டமைப்பைக் கொண்ட நாடு இந்தியா. நாடு விடுதலை அடைந்த காலத்தில் இருந்ததைப் போன்று பல்கலைக்கழகங்கள் 34 மடங்கு வளர்ச்சியடைந்திருக்கின்றன. கல்லூரிகள் 74 மடங்கு வளர்ச்சியடைந்திருக்கின்றன. உயர்கல்வியில் ஏற்படும் ஒவ்வொரு முன்னேற்றமும் நாட்டின் வளர்ச்சிக்கும், எதிர்காலத்தை வளமாக்குவதற்கும் பெரிய அளவில் துணைபுரியும் என்பதில் சந்தேகமில்லை. உயர்கல்வி மேம்பட, கடந்தகால, நிகழ்கால உயர்கல்வி நிலைமைகளைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். கள ஆய்வுகள், நல்ல விவாதங்கள் நடைபெற வேண்டும். இறுதியாக, கொள்கை முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குறைந்தபட்சம் ஒரு பத்தாண்டுக்கு அது ஆவணமாகத் திகழ வேண்டும். உயர்கல்வி முடிவுகளை எடுக்க உறுதுணையாக இருக்க வேண்டும்.
அப்படியான ஒரு ஆவணம், ஒரு கல்விக் கொள்கை தயாரிக்கப்பட இருப்பதாக அறிந்து ஆவலுடன் காத்திருந் தோம். முப்பதாண்டுகளுக்குப் பிறகு உருவாகியிருக்கும் புதிய கல்விக் கொள்கை தொடர்பான அந்த ஆவணம், நம் நம்பிக்கைகளைச் சிதைப்பதாக உள்ளது.
எது தீர்வு?
டி.எஸ்.ஆர். சுப்ரமணியம் குழு பரிந்துரை அடிப் படையில் அமைந்துள்ளதாக நம்பப்படும் ‘2016-ம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கைக்கான சில உள்ளீடுகள்’ என்ற மத்திய மனிதவளத் துறையின் ஆவணம் உயர்கல்விச் சிக்கல்களைப் பற்றிப் பேசுவதாகச் சிலர் குறிப்பிடுகிறார்கள். உயர் கல்வித் துறையில் சிக்கல்கள் இல்லாமல் இல்லை. மூன்றில் இரண்டு பங்கு பல்கலைக்கழகங்கள், 90% கல்லூரிகள் சராசரிக்கும் கீழாகத் தரம் குறைந்தவை. துணைவேந்தர்கள் நியமனங்களோ, சாதி, சமய அரசியல் சார்புத்தன்மை கொண்டதாகவும் லஞ்ச லாவண்யம் சார்ந்ததாகவுமே மாறிவிட்டது என்று கூறினார் 2007-ல் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். தமிழ்நாட்டுக் கல்வி நிலைமைகளை அறிந்தவர்களுக்கு இது புதிய விஷயம் இல்லை. இந்திய உயர்கல்வித் துறையின் அவலங்கள் இவ்வளவுதானா? இக்குழு கண்டறிந்து வெளிச்சத்துக்குக் கொண்டுவராத அவலங்கள், சிக்கல்கள் பல. அவற்றை அறிந்திருந்தால் மட்டுமே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.
ஆளுகைச் சீர்திருத்தம்
இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களை நிர்வகித்து வரும் பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்பக் குழுமம், மருத்துவக் கல்விக் குழுமம் ஆகியவற்றைக் கலைத்துவிட்டு, அவற்றுக்குப் பதிலாக ஒற்றை நிறுவனம் ஒன்றை அமைக்கப் பரிந்துரைத்தது சுப்ரமணியம் குழு. ஆனால் அப்படியெல்லாம் வெளிப் படையாகக் கூறாமல், அதைப் பூடகமாகப் பேசுகிறது அரசு வெளியிட்டிருக்கும் ஆவணம்.
கல்வித் துறையை நிர்வகிக்க இந்தியக் கல்விப் பணித் தேர்வு முறையைக் கொண்டுவர அரசு முயலும் என்கிறது இந்த அறிக்கை. தேர்வுகளும் தேர்வு வாரியங்களும் மட்டுமே ஆளுகைச் சீர்திருத்தங்களை அள்ளி வழங்கிவிடாது. இன்றைய குடிமைப் பணியில் தேர்வுப் பணியில் தேர்வுபெற்று வருபவர்களில் கல்வியில் ஆர்வமுள்ளவர்களை அழைத்து அதில் நிபுணத்துவம் பெறக் கோரி இப்பணிகளை நிர்வகிக்கக் கோரலாம். கல்விப் பணிக்கு எத்தகைய தேர்வு முறைகளை வைத்துத் தேர்வு செய்கிறோம் என்பதல்ல. தேர்வுக்குப் பிறகு அவர்கள் என்ன கற்றுக் கொள்கிறார்கள், அப்பணியை எப்படி அணுகுகிறார்கள், நிர்வகிக்கிறார்கள் என்பதே முக்கியம். இன்றைக்குப் பெரும்பான்மையான உயர்கல்வி நிறுவனங்கள் தனியார் கல்வி நிறுவனங்களாகிவிட்ட நிலையில், அங்குள்ள ஆசிரியர், மாணவர்கள், கல்விசார் பிரச்சினைகள் எல்லாம் ஜனநாயகத்தன்மையற்ற நிலைமைகள் உருவான சூழலில் இதற்கென அமைக்கப்படும் தீர்ப்பாயங்களுக்கு என்ன தேவையிருக்கும், தற்போது உள்ள நீதிமன்றங்களை அணுகுவதில் என்ன சிக்கல் என்பன போன்ற கேள்விகளுக்கும் விடையில்லை.
பொதுச் செலவில், உயர்கல்வி உதவித்தொகையாக வழங்கும் பணத்தின் அளவு பாதியாகக் குறைந்துவிட்டதைப் புள்ளிவிவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. உயர்கல்வி நிறுவனங்களில் எங்கெல்லாம் ஜனநாயகம் உயிர்ப்புடன் இயங்குகிறதோ, அங்கெல்லாம், கல்வித் தரம், கற்றல் கற்பித்தல் முறைகள், புதியன காணும் போக்கு அதிகமாக இருப்பதைக் காண முடியும். இந்நிலையில், முன்னணியில் இருந்த பல உயர்கல்வி நிறுவனங்கள், அதில் பயிலும் மாணவர்களின் செயல்பாடுகளை முடக்க, கல்வி உதவித்தொகையை முடக்க நுட்பமான பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு கல்வி நிறுவனத்தால் பாதிக்கப்படும் மாணவன் நேரடியாக நீதி கேட்க நீதிமன்றத்தை அணுகும் வாய்ப்பை மறுக்கும் ஏற்பாடுகள் இந்தப் பரிந்துரையில் இருப்பது அச்சம் தருகிறது.
உயர்கல்வியில் கட்டுப்பாடு
ஆளுகைச் சீர்திருத்தம் என்ற பெயரில் ஏராளமான கட்டுப்பாடுகள் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. அது தவிர தனியாக ‘கட்டுப்பாடு’ என்ற தலைப்பில் சில ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதில் சில தேவையற்றவை. ஏற்கெனவே நடப்பில் உள்ளவை. உயர் கல்வி ஆராய்ச்சி நிதியைச் சுருக்க ஒரு பரிந்துரை இருக்கிறது. மத்திய புள்ளியியல் முகமைக்கான முன்மொழிவு இருக்கிறது. ஏற்கெனவே புள்ளிவிவரச் சேகரிப்புக்குப் போதுமான மத்திய அரசு நிறுவனங்கள் உள்ளன. புதிய வகைப்பாட்டுப் புள்ளிவிவரங்கள் தேவையெனில், தற்போதுள்ள நிறுவனங்கள் மூலமே அவற்றைப் பெற இயலும். ஏற்கெனவே கிடைக்கும் புள்ளிவிவரங்களின் நம்பகத்தன்மையை அதிகரிப்பதுதான் இன்றைய தேவை. ஆனால், அதற்கு எந்தவொரு முன்மொழிவும் இல்லை. மேலும், ‘உயர்கல்வியில் கட்டுப்பாடு’ என்ற தலைப்பில் தரமதிப்போடு இணைத்து நிதியைச் சுருக்கும் திட்டமும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
உயர்கல்வி தரம்
நம் நாட்டு உயர்கல்வி வளர்ச்சிக்கும் தரத்துக்கும் பெருத்த வேறுபாடு உண்டு என்பதுதான் முக்கியமான பிரச்சினை. தனியார் பங்கு அதிகரிக்க, அதிகரிக்க தரம் குறைந்துகொண்டே வருவதையும் பார்க்க முடியும். “எந்தத் தரக் கட்டுப்பாடும் தேவையில்லை. வணிகர்களும் அரசியல்வாதிகளும் கல்வி நிறுவனங்கள் தொடங்குவதைத் தடைசெய்தாலே போதும்” என்றார் பேராசிரியர் மு.அனந்தகிருஷ்ணன். இதுபோன்ற விஷயங்களை ஆராய்ந்து, அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான வழிவகைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதை விட்டுவிட்டு, தர மதிப்பீடுகள் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் அரசின் பங்கைக் குறைக்கும் முயற்சியே!
தொலைதூரக் கல்வி
உயர்கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று கற்க வாய்ப்பில்லாதவர்களுக்கு ஒரு வரப் பிரசாதம்தான் தொலைதூரத் திறந்தவெளிக்கல்வி. ஆனால் பல்கலைக்கழகங்களின் நிதிச்சுமையை அரசுகள் ஏற்காத நிலையில், தொலைதூரக் கல்வியைப் பல்கலைக்கழகங்கள் ஒரு பொன் முட்டையிடும் வாத்தாகப் பாவிக்கத் தொடங்கின. பல்கலைக்கழகத்தின் இதர துறைகளால் செலவு அதிகரிக்கும்போது, தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் மூலம் லாபத்தைப் பெருக்கத் தொடங்கின. பல்கலைக்கழகப் பணத் தேவைகள் நெறிமுறைகளை மீறி, தொலைதூரக் கல்வியை லாபம் ஈட்டும் கருவியாக மாற்றின. விளைவு, தொலைதூரக் கல்வியின் தரம் பெருமளவு பாதிக்கப்பட்டுவிட்டது. இதைச் சரிசெய்வதற்கான எந்த முன்மொழிவுகளும் மத்திய மனிதவளத் துறை வெளியிட்டிருக்கும் ஆவணத்தில் இல்லை.
கல்வி பன்னாட்டு மையம்
கல்வியை ஒரு சந்தைப்படுத்தும் பொருளாகப் பார்க்கத் தொடங்கிய காலம் முதல்தான் ‘கல்விச் சர்வதேசமயமாக்கல்’ என்ற சொல்லாடலே உருவானது. உயர்கல்வியின் நோக்கமும் தேவையும் மாறியதும் இந்தப் புள்ளியில் இருந்துதான். கல்வியை ஒரு பண்டமாக கருதத் தொடங்கிய பின்னர், ஒரு சர்வதேசச் சந்தைப் பொருளாகப் பாவித்ததுடன், உலகம் முழுவதும் விற்று வாங்கும் பொருளாக ஆக்குவதில் தடைகள் ஏதும் இல்லாத சூழல் உருவாகவும் உலகமயமாக்கல் விரும்பியது. அதன் விளைவாகத்தான் உலக வர்த்தக அமைப்பின் கீழ் உயர்கல்வி கொண்டுவரப்பட்டது.
இரு வகைச் செயல்பாடுகள் மூலம் கல்வி வர்த்தகம் செய்ய இயலும். ஒன்று நம் நாட்டு மாணவர்கள், வளர்ந்த நாடுகளுக்குப் படிக்கச் செல்வது; மற்றொன்று வளர்ந்த நாடுகளின் உயர்கல்வி நிறுவனங்கள் இந்தியாவுக்குள் வருவது. இதன் மூலம் இந்தியப் பணம் வெளிநாடுகளுக்குச் செல்லவே செய்யும். இதைத் தடுக்க முயலும் ஆலோசனையே மனிதவள மேம்பாட்டு அமைச்சக முன்மொழிவில் கூறப்பட்டுள்ள கல்வி சர்வதேசமயமாக்கல் என்ற முன்மொழிவுகள்.
அடிப்படையில், வளர்ந்த நாடுகள் தங்கள் வருவாயை உயர்த்திக்கொள்ளும் திட்டம் இது. இதை இந்தியா எப்போதும் சாதகமாக மாற்ற இயலாது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, சீனா, ஜெர்மனி போன்ற நாடுகளுக்கே நம் மாணவர்கள் அதிகம் படிக்கச் செல்கிறார்கள். இதில் சீனா தவிர எந்த நாட்டுக்கும் மாணவர்கள் செல்வதைத் தடுக்க முடியாது. ஏனெனில், மேற்படி நாடுகளுக்குச் செல்லும் மாணவர்களில் பெரும்பாலானோர் பொருளாதார வசதி உள்ளவர்கள். மேலும், அந்த நாடுகளில் உள்ள புகழ்வாய்ந்த பல்கலைக்கழகங்களும் இந்தியாவுக்கு வரப்போவதில்லை. இது ஆட்சியாளர்களுக்கும் முன்மொழிபவர்களுக்கும் தெரிந்தே இருக்கலாம். இருந்தும் அந்த முன்மொழிவுகளைப் பற்றிப் பேசுவது, உயர்கல்வியில் 100% அந்நிய நேரடி மூலதனத்துக்கு வழிவகுக்கவும், உலக வர்த்தக அமைப்பின் ஷரத்துக்களை நடைமுறைப்படுத்தவும்தான்!
ஆசிரியர் மேம்பாடு
முன்பருவக் கல்வி முதல் பள்ளிக் கல்வி முடியும் வரை பணியாற்றும் ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்தப் பயிற்சிகள் போதுமானவையா, அதன் மூலம் பலன் உண்டா என்பது வேறு விஷயம். ஆனால், உயர்கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எந்தவிதப் பயிற்சியும் இல்லை. ஆய்வியல் நிறைஞர், முனைவர் போன்ற படிப்புகள் ஆய்வு சார்ந்தவைதானே தவிர மாணவர்கள் உளவியல் சார்ந்ததோ, கற்றல் கற்பித்தல் முறைகள் சார்ந்தவையோ அல்ல. இந்தக் குறைபாட்டுக்கான தீர்வாக ஏற்ற முன்மொழிவுகள் இந்த ஆவணத்தில் இல்லை.
ஆசிரியர் தேர்வு, பதவி உயர்வு போன்றவற்றை ஆராய்ந்து அறிய ஒரு குழு நியமிக்கப்படும் என்றும், அக்குழு வெளிநாடுகளுக்குச் சென்று ஆய்ந்து அறிந்து அறிக்கை பெற்று அதன் அடிப்படையில் பரிந்துரை செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள நடைமுறைகளில் ஊழல், அரசியல் தலையீடுகளைக் கட்டுப்படுத்தினாலே இதற்குத் தீர்வு காண முடியும்.
கல்விக்கான நிதி
கோத்தாரி கல்விக் குழு பரிந்துரைத்த 6% கல்விச் செலவை எட்டியே தீருவோம் என்று சூளுரைத்தது போல் கூறியது சுப்ரமணியம் குழு. ஆனால், அந்தத் தொனி மாறி 6% எட்ட முயற்சி மேற்கொள்ளப்படும் என்கிறது தற்போதைய ஆவணம்.
உயர்கல்விக்கான அதிக நிதி தேவைப்படுவதால், இனி உயர்கல்வி நிறுவனங்கள் துவங்கப்பட மாட்டாது என அறிவிக்கிறது இவ்வறிக்கை. தற்போதுள்ள நிறுவனங்கள் மட்டுமே விரிவுப்படுத்தப்படுமாம். அதுவும் எப்படி? தொண்டுள்ளம் கொண்டோரைத் தேடிக் கண்டுபிடித்து நிதி சேகரிப்பது, முன்னாள் மாணவர்களிடம் நிதி வசூல், கட்டணங்களை அதிகரிப்பது, பொது-தனியார் பங்கேற்புக்கு வழிவகை செய்வது, ஆகியவற்றின் மூலம் சரிசெய்து கொள்ளவேண்டும் எனும் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. கல்வியில் தனியார்மயம் தோன்றி கால் நூற்றாண்டு ஆகிவிட்டது. ஆனால் எந்த ஒரு அரசும் ஏற்கெனவே இருந்த புகழ்வாய்ந்த நிறுவனங்களின் மீது கை வைத்ததில்லை. மத்திய அரசின் புதிய கொள்கை அமலானால் ஐஐடி, ஐஐஎம், ஜேஎன்யு போன்ற நிறுவனங்களுக்கும் இந்த கதிதான்.
கல்வியில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள இனி தனியாருக்கு வரிச்சலுகை உண்டு. அந்நிய நேரடி மூலதனம் வரவழைக்கப்படும். தனியார்மயத் தீமைகளுக்கு மேலும் தனியார்மயமே தீர்வு. எப்படி இருக்கின்றன பரிந்துரைகள்!
தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தவிர 30 சங்க ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி செயல்பாட்டாளர்கள் என ஒன்றிணைந்து சுமார் ஒரு இலட்சம் பேரை உள்ளடக்கிய கல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பிரதமரின் ‘மன் கி பாத்’ உரை உடனடியாக மொழியாக்கம் செய்யப்பட்டு 19 மொழிகளில் வெளிவருகிறது. ஆனால் கல்விக் கொள்கைக்கான உள்ளீடுகளைத் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியிட பெரும் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. அப்போதும்கூட 11 மொழிகளில்தான் இந்த ஆவணம் வெளியாகியிருக்கிறது.
அரசு ஊழியர்கள் குறிப்பாணைக்குப் பதில் கோருவது போல் உடனடியாகக் கருத்துக் கூற வேண்டும் என்ற அதிகாரத் தொனி வேறு! கடும் போராட்டத்துக்குப் பின்னர் செப்டம்பர் 15 வரை அரசின் ஆவணத்தின் மீது கருத்துக் கேட்புக்கான மீதான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இந்தியக் கல்வி வரலாற்றில் ஒரு கல்விக் கொள்கை உருவாக்கத்துக்கு ஆரம்ப நிலையிலேயே இத்தனை எதிர்ப்புகள் எழுந்ததில்லை. இந்தப் புதிய கல்விக் கொள்கையால் நன்மைகளைவிட தீமைகளே அதிகம் என்று பார்க்கப்படும் சூழலில், இக்கொள்கை முற்றிலும் திருத்தி எழுதப்பட வேண்டும். அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கிய, விளிம்புநிலை மக்களையும் சிறுபான்மை மக்களையும் அங்கமாகக் கொண்ட தரமான கல்வியாளர் களோடு புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை உருவாக்க வேண்டும். இன்றைய அவசரத் தேவை இதுதான்!
- மாநில அமைப்பாளர், கல்வி உரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பு
‘புதிய கல்விக் கொள்கை- ஆசிரியரும் மாணவரும் குற்றவாளிக் கூண்டிலா?’ என்ற நூலின் ஆசிரியர்.
தொடர்புக்கு: tnsfnmani@gmail.com

நம் கல்வி... நம் உரிமை!- கீழ்ப்படிய மட்டும் சொல்லும் கல்விக் கொள்கை

நம் கல்வி... நம் உரிமை!- கீழ்ப்படிய மட்டும் சொல்லும் கல்விக் கொள்கை


தனிப்பட்ட மனிதருக்கு மட்டுமல்ல, முழுச் சமுதாயத்துக்கும் பயன்படும்வகையில் அரசாங்கத்தின் விதிகளையும் வரையறைகளையும் உருவாக்குவதே பொதுக்கொள்கை என்பார் அமெரிக்கப் பேராசிரியர் டக்ளஸ் கொமெரி. சமுதாயத்தின் பல்வேறு சமூகக் குழுக்களையும் மனதில்கொண்டு அரசின் கொள்கைகளை உருவாக்கச் சிறப்பான வழி அதுவே. நமது நாட்டிலும் தேசிய கல்விக் கொள்கை 2016 -ஐ உருவாக்குவதற்கான கடைசிக்கட்டத்தில் நாம் இருக்கிறோம்.
கல்வியில் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தவர் அமெரிக்கக் கல்வியாளர் ஜான் திவே. நூறாண்டுகளுக்கு முன்னால் அவர் துருக்கி நாட்டின் கல்விச் சீர்திருத்தங்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். சமூகத்துக்குத் தேவையான முறையில் எப்படிப்பட்ட நோக்கங்களுக்குக் கல்வி சேவை செய்யும் என்பதில் தெளிவு வேண்டும். கல்வி சார்ந்த என்ன மாதிரியான குறிக்கோள்களை அது சாதிக்க விரும்புகிறது என்பதிலும் அரசுக்குத் தெளிவு வேண்டும். தெளிவில்லாமல் செய்யப்படும் சீர்திருத்தங்களெல்லாம் அரைகுறையாக முடிந்துவிடுவதுடன் எதையும் சாதிக்க முடியாமல், புதிய சிந்தனைகளின் முன்னால் நிற்க முடியாமல் கடைசியில் கைவிடப்படுவதே அதன்தலைவிதி. அப்படி இருந்தால் மட்டும்தான், அரசால் அதற்கான செயல்பாடுகளையும் நடவடிக்கைகளையும் எடுக்க முடியும் என்றார் அவர். அந்தத் தெளிவு இல்லை என்றால், அந்தச் சீர்திருத்தம் சரியாக வராது. எதையும் சாதிக்க முடியாமல் கடைசியில் கைவிடப்படுவதே அதன் தலைவிதி. அதன் பிறகு, புதிய கருத்துகள் உருவாகும்.
திவே சொல்வதையே இன்னொரு கல்வியாளரான சி.வின்ச்சும் எதிரொலிக்கிறார். பொதுக்கல்விக்கான ஒரு கொள்கை தெளிவாக விவாதிக்கப்பட வேண்டும். அதன் நோக்கங்கள் தெள்ளத் தெளிவாக விளக்கப்பட வேண்டும். அப்படியில்லை என்றால், மறைமுகமான நோக்கங்களை அந்தக் கொள்கை வைத்திருக்கிறது என்று சொல்லலாம். சமூகத்தின் அதிகாரம் படைத்த பிரிவினர் பயனடைவதற்கு அது வாய்ப்பளிக்கும். ஓரங்கட்டப்பட்ட மக்கள் அதனால் சமூகத்தின் மீது நம்பிக்கையிழப்பார்கள். ஒரு கல்விக் கொள்கை தனது நோக்கங்களைத் தெளிவில்லாமல் பேசி மற்றவர்களைக் குழப்பினால் அதுவும் ஒரு தப்பிக்கும் தந்திரமே என்கிறார் ஆர்.எஃப்.டியர்டன் எனும் கல்வியாளர். அப்படியான சிலவகை சீர்திருத்தங்களில் அனைத்து மக்களும் ஈடுபட்டாலும் சரி. இறுதியில் முடிவெடுக்கிற அதிகாரம் ஒரு சிலர் கையில் சிக்கிவிடும்.
கல்வியின் சமூக நோக்கம்
தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கை 2016-ன் முன்வடிவில் உள்ள நோக்கங்களை நாம் சரியாக ஆய்வுசெய்ய வேண்டியது அவசியம். அப்போது தான் நம்மால் அதன் பரிந்துரைகளையும் அதன் பேரில் எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகளையும் சரியாகப் புரிந்துகொள்ள முடியும். வெளியில் சொல்லப்படுகிற குறிக்கோள்கள் எப்போதும் கல்வியைத் தீர்மானிப்பதில்லை. புதிய கல்விக் கொள்கை பரிந்துரைக்கிற செயல்களை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு மறைமுக நோக்கங்கள் பற்றிய புரிதல் அவசியம். நான் இந்தப் புதிய கல்விக் கொள்கையின் நோக்கங்களை 1968, 1986 வருடங்களில் வெளியான முந்தைய தேசிய கல்விக் கொள்கைகளின் பின்னணியில் புரிந்துகொள்ள முயல்கிறேன். கல்வியின் சமூக நோக்கத்தை இந்தியாவின் தேசிய லட்சியங்களோடும் தேசத்தைக் கட்டியமைக்கிற பணியோடும் நெருக்கமாகப் பிணைக்கிற பணியை அந்த இரண்டு கல்விக் கொள்கைகளும் முன்வைக்கின்றன.
தேசிய இலக்குள் இவைதான்: ஜனநாயகத் தன்மையுள்ள பொருளாதார வளமான தேசம், அதன் பண்பாட்டில் வேர்கொண்டிருக்க வேண்டும். ஆனால், தனது பண்பாட்டில் உள்ள குறைகளையும் அது அறிந்திருக்க வேண்டும். அந்த தேசம் உள்நாட்டில் நன்றாக ஒருங்கிணைந்ததாக இருக்கும். வெளியிலிருந்து வரும் ஆக்கிரமிப்புகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்வதாகவும் அது இருக்கும்.
சமத்துவம், நீதி, சுதந்திரம், கண்ணியத்தை எல்லாக் குடிமக்களுக்கும் உறுதிசெய்கிற ஒரு பல வண்ண சமூகத்தைக் கடந்த காலக் கல்விக் கொள்கைகள் மனதில் கொண்டிருந்தன. சமூக ஒருங்கிணைவும் சகோதரத்துவமும் குடிமக்களிடம் காணச்செய்வது அவற்றின் முக்கியமான சமூகக் குறிக்கோள்.
கொள்கையும் சமூகச் சித்தாந்தமும் மதநடுநிலை, அறிவியல் ஆர்வத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். 1968-ல் வெளியான மத்திய அரசின் கல்விக் கொள்கை மனிதவள மேம்பாட்டையும் கல்வியின் பொருளாதார நோக்கங்களையும் வலியுறுத்தியது. ஆனால், ஒரு ஜனநாயகச் சமூகத்தை உருவாக்குவதில் கல்வியின் உள்ளார்ந்த ஆற்றலையும் மனதில் கொண்டது.
1986-ல் வெளியான கல்விக் கொள்கை தனிநபர் சுதந்திரத்தின் மீது அதிகமாகக் கவனம் செலுத்தியது. அந்த இரண்டு கல்விக் கொள்கைகளுமே நாட்டின் கல்வி செய்ய வேண்டிய சமூகக் குறிக்கோள்களைப் பட்டியலிட்டன. அவற்றை அடைய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தன. மாணவர்களிடம் அதற்கான திறன்களைக் கல்வி வளர்க்க வேண்டும் என்பதிலும் அவை தெளிவாக இருந்தன. அத்தகைய திறன்களை உடைய குடிமக்கள்தான் சமூகக் குறிக்கோள்களை அடைய முடியும். தனிநபர்களின் அத்தகைய திறன்களும் ஜனநாயகப் பண்புகளும், திறந்த மனதுடனான அணுகுமுறையும் இந்தியப் பண்பாடு பற்றிய பெருமிதமும் புதியன படைக்கும் சிந்தனையும் அதற்கு உதவும். பலமான அறிவுத் தளத்தை உருவாக்க வேண்டும் என்னும் கல்வியின் நோக்கங்களும் அதில் இணையும்போது செயலூக்கமான படைப்பாற்றல் மிக்க குடிமக்களை உருவாக்க முடியும்.
மாணவர்களிடம் இத்தகைய திறன்களையும் நோக்கங்களையும் வளர்த்தெடுப்பது, கல்விக் கொள்கையின் சமூகக் குறிக்கோள்களுடனும் சமூகம் பற்றிய பார்வையுடனும் தொடர்புள்ளது. சமூகம் பற்றிய பார்வையில் புதிய கல்விக் கொள்கை 2016-க்கான முன்வடிவு வேறுபட்டுள்ளது. சமூகத்தின் நோக்கங்களையும் கல்வியின் நோக்கங்களையும் புரிந்துகொள்வதிலும் அவற்றை விளக்குவதிலும் அது வித்தியாசமானதாக உள்ளது. உண்மையில், வெளிப்படையான ஜனநாயக விரோதம் எதுவும் அதில் இல்லை. வெளிப்படையான குறுகிய மனப்பான்மையும் அதில் இல்லை. ஆனாலும், அது முன்வைக்கிற கருத்துகள் அவசியம் விவாதிக்க வேண்டியவை.
தேசியக் குறிக்கோள்களில் குழப்பம்
அதன் முதல் உறுத்தலாக இருப்பது சமூகம் பற்றிய அதன் பார்வை. ‘வேகமாக மாறிக்கொண்டிருக்கிற, எப்போதும் உலகமயமாகிற, அறிவை அடிப்படையாகக்கொண்ட பொருளாதாரத்தையும் சமூகத்தையும்’ பற்றி அது பேசுகிறது. இத்தகைய மாற்றங்கள் கடவுளால் தரப்பட்டவை. அவை மனித வாழ்வு மீதும் வாழ்க்கைத் தரம் மீதும் ஏற்படுத்துகிற தாக்கங்களைப் பற்றிய விமர்சனம் தேவையில்லை. இத்தகைய மாற்றங்களைக் கொண்டுவந்த சக்திகள் கண்ணில் காண முடியாதவை. அவை எதிர்கொள்ள முடியாதவை என்பதுபோல கல்விக் கொள்கை பேசுகிறது. அதனால், இந்தியாவின் முன்னால் இருக்கிற ஒரே வாய்ப்பு தற்போதைய மாற்றத்தின் போக்கோடு கலந்து நாமும் பயணிப்பதுதான்.
சமூக அக்கறைகள், பிரிவினைகள், சமூக நீதிப் பிரச்சினைகள், ஜனநாயகம் பற்றி ஆங்காங்கே குறிப்பிடத்தான் செய்கிறது கல்விக் கொள்கையின் முன்வடிவு. ஆனால், அதன் கண்கள் எப்போதும் ‘அறிவை அடிப்படையாகக்கொண்ட பொருளாதார’த்தின் மீதே நிலைகுத்தி நிற்கின்றன. இதை உருவாக்கியவர்கள் கருத்துரீதியாகக் குழம்பியுள்ளனர். நியாயமான சமத்துவச் சமூகத்தை உருவாக்குதல் போன்ற தேசியக் குறிக்கோள்களில் குழம்பியுள்ளனர். கல்வித் துறையின் இலக்கான அனைத்துக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்ப்போம் என்பதிலும் நீதியும் சமத்துவமும் கொண்ட பண்புகளை மாணவர்களிடம் உருவாக்குகிற விஷயத்திலும் குழம்பியுள்ளனர். கல்விக் குறிக்கோள்கள் எனும் தலைப்பில் உள்ளவை எல்லாம் பெரும்பாலும் கல்வி இலக்குகள்தான். ஆனால், உண்மையில் கல்வியின் குறிக்கோள்கள் ஆங்காங்கே இந்தக் கொள்கை அறிக்கையில் மின்னுகின்றன. ஆனால், ஒருவர் அவற்றைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அவற்றைத் தொகுத்து ஓரிடத்தில் வைத்துதான் புரிந்துகொள்ள முடியும். அவற்றைத் தொகுத்தால் நான்கு பெரிய ரகங்களாக இருக்கின்றன. அவை மகிழ்ச்சி தரக்கூடிய வேலைக்கான திறன்கள், பண்பாட்டுப் பாரம்பரியம், வாழ்க்கைக்கான பண்புகள், அறிவு என்ற பிரிவுகளாக இருக்கும்.
இந்த கல்விக் கொள்கை தருகிற அழுத்தம் திறன்களைப் பற்றியதுதான் என்பது தெளிவாகத் தெரிகிறது. திறன்கள் பற்றிய பரிந்துரைகள் ஒவ்வொரு துறையிலும் ஓங்கி நிற்கின்றன. கல்வியின் மிக முக்கியமான இலக்கு என்பது வேலைக்கு ஏற்றாற்போல மனிதர்களை உருவாக்குவதுதான். வேலைக்கான திறன்கள் என்பவைகூடத் தற்போதைய அமைப்பு முறையைப் பின்தொடர்வதற்காகத்தான். அவற்றை எதிர்கொள்ளவோ, மேம்படுத்தவோ அவற்றை வளர்த்தெடுப்பதற்கானவையாகக்கூட அவை இல்லை.
பண்பாட்டுப் பாரம்பரியம் என்பது பண்டைக்கால இந்தியாவின் பண்பாடுதான். பல வண்ணப் பண்பாடு, பன்முகத்தன்மை, சகிப்புத்தன்மை உள்ளிட்டவற்றை அது குறிப்பிட்டாலும் ஓரிடத்தில் அறிவின் உலகத்துக்குப் பண்டைக்கால இந்தியா தான் பங்களித்தது என்று விளக்குகிறது. அரவிந்தர் சொல்கிறபடி, மீதம் இருக்கிற 21-ம் நூற்றாண்டு இந்தியாவுக்குச் சொந்தமானது என்கிறது அறிக்கை. அதை நாம் எந்த அர்த்தத்திலும் எடுத்துக்கொள்ளலாம். குறுகிய மனப்பான்மைக்கான வெளிப்படையான அறிவிப்புகள் எதுவும் இல்லைதான். ஆனாலும் மற்ற பண்பாடுகள் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. பண்டைய இந்திய நாகரிகம் பற்றிய விவரிப்புகள்தான் இருக்கின்றன.
பொறுப்புள்ள குடிமகனை விளக்குதல்
பண்புகள் பற்றிய பகுதியில் நீதி, சமத்துவம் மற்றும் காலந்தவறாமை முதலாக ஏறத்தாழ அனைத்தும் குறிப்பிடப்பட்டுள்ளன. நுணுக்கமாக இதனை நெருங்கிப்பார்த்தால் இந்தப் பண்புகள் குடியுரிமைக்கும் சுதந்திரத்துக்குமான தரங்களாகத் தன்னை வெளிப்படுத்துகின்றன. இந்தியாவின் கல்வி தனது இந்தக் கொள்கையின் மூலமாக, ‘சுதந்திரத்தைப் பொறுப்புடன் கையாள்கிற’, ‘பொறுப்புள்ள குடிமக்க’ளை உற்பத்தி செய்வதற்கு முயற்சி செய்யும். வேலைக்கான திறன்கள், விமர்சனபூர்வமான அறிவு இல்லாமலிருப்பது ஆகியவற்றின் மீது மிகுந்த அழுத்தத்தைத் தருகிறது இந்தக் கொள்கை அறிக்கை. இந்தப் பின்னணியி லிருந்து ஒருவர் இதை வாசித்தால், ஒரு நல்ல குடிமகன் என்பவர் அரசுக்கும் அரசியல் அதிகாரத்துக்கும் இணங்கியவர். அரசின் நல்ல தன்மையின் மீது முழுமை யான நம்பிக்கை வைத்துள்ளவர். இன்றைய சமூக அமைப்பு முறையை ஏற்றுக்கொண்டவர். அவர்தான் நல்ல குடிமகன்.
அரசும் சமூகமும் பெரும்பான்மையான மக்களுக்கு அநீதி செய்தால் அதற்குத் தானும் பொறுப்பு என்று நினைத்துக்கொள்கிற குடிமக்களுக்கு இதில் இடமில்லை. அரசாங்கத்தின் செயல்பாடுகளையும் கொள்கைகளையும் எதிர்க்கிற, குடிமக்களுக்கும் இதில் இடமில்லை. இந்தக் கொள்கை அறிக்கையின்படி தேவையான ஒரே அறிவு என்பது வேலைக்கான திறன்கள் போன்ற அறிவுதான். அது இந்தியாவின் பணியாளர்கள் சிறந்த முறையில் செயல்திறனை வெளிப்படுத்த வேண்டும். அதற்குத் தேவையான முறையில் தொடர்ந்து மாறுகிற திறன்கள் பற்றிய அறிவை வழங்குவதே இந்தக் கல்விக் கொள்கையின் முக்கியமான நோக்கம். அறிக்கையில் விவாதிக்கப்படுகிற இந்தியப் பாரம்பரிய அறிவு ஒரு விதிவிலக்கு. அது நமது நாட்டின் பண்பாட்டுப் பாரம்பரியம் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காக இதில் பேசப்படுகிறது. உலகு, இயற்கை, சமூகம், மனித வாழ்வு பற்றிய புரிதல், பல்வேறு துறைகளில் மனிதச் சாதனைகள் பற்றிய பெருமை கொள்ளல், அறிவுசார் மகிழ்வு உள்ளிட்ட எதையும் புரிந்துகொள்வதற்கான அறிவு எதுவும் இந்தக் கொள்கை அறிக்கையில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. அறிவைப் பற்றி அது குறிப்பிடப்படுகிற ஒவ்வொன்றும் பொருளாதாரத்தோடும் திறன்களை வளர்த்துக்கொள்வதற்கான அறிவோடும் மட்டுமே தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. மனிதரைப் பற்றிய அறிவு, சிக்கலான பண்பாட்டு நெறிமுறைகளைப் பற்றிய அறிவு, இன்றைய உலகில் வாழ்வதற்கு உரியது எது? மரணிப்பது எது என்பது பற்றி சொந்தமாக ஒரு முடிவுக்கு வருவதற் கான எந்த வாய்ப்பும் இந்த கல்விக் கொள்கையில் தரப்படவில்லை.
எப்போது அரசையும் அரசாங்கத்தையும் ஆதரிக்க வேண்டும், எப்போது பாராட்ட வேண்டும், எப்போது எதிர்க்க வேண்டும் என்பதற்கான அறிவு தேவையில்லை. சுருக்கமாகச் சொன்னால், பகுத்தறிவுடன் சொந்த அறிவோடு இருப்பவராக இருந்துகொண்டே மொத்த மனித குலத்தோடும் இணங்கியிருப்பவராக வாழ்வதற்குத் தேவையான அறிவைப் பற்றிய புரிதல் இந்தக் கல்விக் கொள்கையில் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அரசாங்கம் சொல்வதுபோலக் கேட்கிற, அதை நம்புகிற, கீழ்ப்படிகிற, உற்பத்தி செய்கிற, எல்லாவற்றுக்கும் அடங்கிப்போகிறவர்களான குடிமக்களையும் சிந்திக்காத, கேள்வி கேட்காதவர்களையும் உருவாக்குவதற்கான கல்விக் கொள்கை என்று இதைச் சொல்லலாம்.
குடிமை உரிமையைக் கொச்சைப்படுத்தி, அதிலிருந்து ஒரு கல்வி முறையை உருவாக்குவதற்கான கொள்கை இது. நெருக்கடிகள் வரும்போது சொந்தமாக முடிவுகள் எடுத்து ஒருவர் செயல்பட வேண்டும். தெளிவாகவும் விமர்சனபூர்வமாகவும் சிந்திக்க வேண்டும். அத்தகைய குடிமக்களைத்தான் உயிர்ப்போடு இருக்கும் ஜனநாயகம் நம்பியுள்ளது. அதை மீண்டும் நினைவில் கொள்ள வேண்டிய தருணம் இது.
அறிவைச் சார்ந்துள்ள பொருளாதாரங்கள் என்று சொல்லப்படும் ஜனநாயக நாடுகள் கேள்வி கேட்காமல் கீழ்ப்படிகிற, உற்பத்தி மையங்களைச் சார்ந்திருப்பதில்லை. அந்த நாடுகள் நிலைத்து நிற்பதற்கு அவை ஒன்றும் காரணம் அல்ல. ஆனாலும், நமது 2016 புதிய கல்விக் கொள்கை அத்தகைய கீழ்ப்படிதலைத்தான் தனது எதிர்கால லட்சியமாகக்கொள்கிறது.
- ரோஹித் தங்கர், ராஜஸ்தானைச் சேர்ந்த கல்வி ஆலோசகர்,
© ‘தி இந்து’ ஆங்கிலம்
தமிழில்: த.நீதிராஜன்

என்ன எதிர்பார்க்கிறது இந்தியா?

என்ன எதிர்பார்க்கிறது இந்தியா?

ஆழி செந்தில்நாதன்
Comment   ·   print   ·   T+  
3
புதிய கல்விக் கொள்கையின் நகல் அறிக்கை, தாய்மொழி வழிக் கல்வி குறித்தும், அதன் முக்கியத்துவம் பற்றியும் மிகச் சரியாகவே இனம் கண்டிருக்கிறது. ஆனால், ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே தாய்மொழி வழிக்கல்வி என்று வரம்பு விதிக்கிறது. உயர் கல்வியும் தாய்மொழியில் அல்லது மாநில மொழியில் இருந்தாக வேண்டும். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆவணத்தில், மக்களின் மொழிகளில் உயர் கல்வி குறித்து இந்த அறிக்கையில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்பது பெரும் குறை. மக்களின் தாய்மொழிகளில் உயர் கல்வி இருக்க வேண்டும் என 1948-ல் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் ஆணையம் முன்மொழிந்திருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.
அந்நிய மொழி ஒன்றைப் பயிற்றுமொழியாகக் கொண்டு, இந்த உலகத்தில் எந்த ஒரு நாடும் நீண்ட கால வளர்ச்சியையும் செழுமையையும் பெற்றதில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். முன்னாள் காலனி நாடுகள் மட்டுமே தங்களுடைய உயர் கல்வி நிறுவனங்களை அந்நிய மொழிகளில் உருவாக்கி நடத்துகின்றன. ஆனால், வளர்ந்த நாடுகள் அனைத்துமே தங்கள் உயர் கல்வி நிறுவனங்களைத் தமது மக்களின் மொழிகளிலேயே நடத்துகின்றன. இந்நிலையில், உலகளாவிய தரவரிசைப் பட்டியல்களில் இந்தியாவிலுள்ள பல்கலைக்கழகங்கள் மிகவும் பின்தங்கிவருவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
நடப்பு வேறு
தேசிய, சர்வதேச அளவில் புலம்பெயர்பவர்களுக்கு ஆங்கிலம் ஒரு இன்றியமையாத மொழி என்று இந்த நகல் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அதிகரித்துவரும் உலகமயச் சூழலில் அந்நிய மொழிக்கான திறன், கூடுதலான ஒரு அனுகூலம் என்பது உண்மையே என்றாலும், நடைமுறை உண்மை முற்றிலும் வேறு. இந்தியாவில், மாநிலங்களுக்கு இடையில் புலம்பெயர்பவர்களின் எண்ணிக்கை வெறும் 4%தான் (2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி). இந்தியாவை விட்டு வெளியே புலம்பெயர்பவர்களின் எண்ணிக்கையும் குறைவுதான். எனவே, தேசிய கல்விக் கொள்கையில் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை அளிப்பதைவிட, பள்ளிகளில் அதை ஒரு விருப்பப் பாடமாக அறிமுகப்படுத்துவதே நல்லது.
பயிற்று மொழியாக ஓர் அந்நிய மொழி இருப்பதற்கும் கல்வி, அறிவியல் -தொழில்நுட்பம், பன்னாட்டு வர்த்தகம் மற்றும் வணிகம் ஆகியவற்றில் வளர்ச்சியையும் வெற்றியையும் எட்டுவதற்கும் இடையிலான உறவு எதிர்மறையானதாகவே இருப்பதைப் பன்னாட்டுப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஒரு அந்நிய மொழியைப் பயிற்றுமொழியாகக் கொண்டு படிப்பதற்கும் அந்த அந்நிய மொழியையே கற்றுத் தேர்வதற்கும் இடையிலான உறவும்கூட எதிர்மறை உறவாகவே இருக்கிறது என்பதுதான் ஆச்சரியமான உண்மை.
இந்தத் துறைகளில் முறையற்ற வகையிலும் உண்மைக்குப் புறம்பாகவும் ஆங்கில மொழிக்கு நாம் அளித்துவரும் அழுத்தமானது இந்தியாவுக்கு மிகப்பெரிய செலவினமாகவே இருக்கிறது. அத்துடன் தாய்மொழிகளைப் புறக்கணிப்பது இந்தியாவில் உள்ள நூற்றுக்கணக்கான மொழிகளை அழிவை நோக்கித் தள்ளுகிறது. இது ஒரு நாகரிகமே அழிந்துபோவதற்கு ஒப்பானதாகும்.
அரசியல் சாசனத்தின் எட்டாம் அட்டவணையில் உள்ள மொழிகள், இந்தி உட்பட, கல்வித் துறையில் மிகப்பெரிய அளவுக்குப் பாதிப்பை எதிர்கொண்டிருக்கின்றன. கல்வித் துறைதான் எந்த ஒரு மனித வள ஆற்றலையும் படைக்கிறது. அதே சமயம், ஒரு மொழி உயிர்த்திருப்பதற்கும் நிலைத்து நீடிப்பதற்குமான அடிப்படைத் துறையும் கல்வித் துறைதான்.
எதற்குச் சிறப்பிடம்?
சம்ஸ்கிருதத்தை இந்த ஆவணம் தனிச் சிறப்பான இடத்தில் வைத்திருக்கிறது. சம்ஸ்கிருதத்தையும் இந்தியையும் இந்திய ஒன்றியத்திலுள்ள பெரும் எண்ணிக்கையிலான பிற மொழிகளுக்கு இணையாகவே வைத்து நடத்த வேண்டும். ஒரு தேசத்தின் ஒற்றுமைக்கு மொழிச் சமத்துவமானது ஒரு முன்நிபந்தனையாகும் என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நமக்குக் காட்டிவருகிறது. மொழிச் சமத்துவம் எங்கெல்லாம், எப்போதெல்லாம் மீறப்படுகிறோ, அப்போது அச்சுறுத்துலுக்கு உள்ளாவது ஒற்றுமைதான். எனவே, எந்த ஒரு மொழிக்கும் சிறப்பிடம் கொடுத்து நகல் ஆவணத்தில் சுட்டிக்காட்டுவது தேவையற்றது.
இந்தியா போன்ற பன்மைத்தன்மையுள்ள ஒரு நாட்டில், மொழிச் சமத்துவம் தொடர்பாக முக்கியமளித்துப் பேசுவதும் இன்றியமையாதது. அரசால் நடத்தப்படும், உயர் கல்விக்கான சேர்க்கைகளுக்கும் வேலைகளுக்குமான நுழைவுத் தேர்வுகளை அவரவர் தாய்மொழியில் எழுதுவதற்கான உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்வுகளில் இந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இதனால் கோடிக்கணக்கான இந்தியர்களின் மொழி உரிமைகள் அவமதிக்கப்படுகின்றன. மொழி உரிமைகள் தொடர்பான இந்த வெளிப்படையான மீறல் குறித்து நகல் ஆவணம் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. எந்த ஒரு மாணவருக்கும் அல்லது வேலை தேடுவோருக்கும் அவரது மொழியில் தேர்வு எழுதுவதற்கான உரிமை பறிக்கப்படக் கூடாது.
என்ன செய்ய வேண்டும்?
கல்வியின் எல்லா மட்டங்களிலும் பயிற்று மொழி, குழந்தையின் தாய்மொழியாக இருக்க வேண்டும். கல்வி மற்றும் பிற துறைகளிலிருந்து விலக்கிவைக்கப்பட்டிருப்பதன் மூலமாக அழிவை எதிர்கொண்டிருக்கின்ற, இதுவரை அட்டவணையில் சேர்க்கப்பட்டிராத மொழிகளின் விவகாரத்தில் குறிப்பான கவனம் செலுத்துவதும் அவசியம்.
மேலும், எல்லாப் படிப்புகளுக்குமான நுழைவுத் தேர்வு களையும் அனைத்து தாய்மொழிகள் / அட்டவணை மொழி களில் நடத்துவதும், மத்திய அரசு வேலைகளுக்கான எல்லாப் போட்டித் தேர்வுகளையும் எல்லா அட்டவணை மொழிகளிலும் நடத்துவதும் அவசியமானவை. கல்விக் கொள்கையின் எல்லா விவகாரங்களிலும் மொழிச் சமத்துவம் மற்றும் மொழி உரிமைக் கோட்பாடுகள் உறுதிசெய்யப்பட வேண்டும்.
(இந்தியாவிலுள்ள 40-க்கும் மேற்பட்ட மொழி களின் பிரதிநிதிகளின் ஆதரவில் இயங்கும் ‘மொழி நிகர்மைக்கும் உரிமைகளுக்குமான பரப்பியக்கம்’ (CAMPAIGN FOR LANGUAGE EQUALITY AND RIGHTS, CLEAR), ஜூலை 27, 2016 அன்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் அளித்த கடிதத்தின் சாரம்)
- ஆழி செந்தில்நாதன் (தமிழ்நாடு, கூட்டக ஒருங்கிணைப்பாளர், கிளியர்),
மற்றும் உறுப்பினர்கள்: பேரா.ஜோகா சிங் (பஞ்சாப்), பிரியங்க் பார்கவ் (கர்நாடகம்), பேரா.பி.பவித்திரன்(கேரளம்), பேரா. கோர்கோ சாட்டர்ஜி (மேற்கு வங்கம்), பேரா. ரவேல் சிங் (புது டெல்லி), பேரா.தீபக் பவார் (மகாராஷ்டிரம்), சாகேத் ஸ்ரீபூஷண் சாகு (ஒடிசா)
Keywords: என்ன எதிர்பார்க்கிறது இந்தியா?

நம் கல்வி... நம் உரிமை, கல்விக் கொள்கை,

இன்றைய இந்தியக் கல்வியின் முதல் தோல்வி, முதல் துயரம் எது? உலகில் எங்கும் இல்லா அளவுக்குக் கொடும் ஏற்றத்தாழ்வுகள் கொண்ட கல்வி அமைப்பு; வெவ்வேறு பொருளாதார மட்டத்துக் குழந்தைகளுக்கும் வெவ்வேறு தரமுடைய பலமட்டப் பள்ளிகள். உச்சி குறுகி, அடி பரந்த இந்த சமுதாயப் பிரமிடின் உச்சியில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வசதி படைத்தோர் இன்றைய உலகின் வாய்ப்புகளை அள்ளிச் செல்லும் திறமை பெறுகின்றனர். பெரும்பான்மையோர் தகுதியற்றவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு, வடிகட்டப்பட்டு, வெளியே தள்ளப்படுகின்றனர். இவ்வாறு இழப்புக்கும் தவிப்புக்கும் உள்ளாகுபவர் பெரும்பாலும் நமது சாதிய சமுதாயத்தின் அடித் தட்டினரான தலித்துகள், பழங்குடியினரே.
இந்தியக் கல்வியின் இந்த வர்க்க-சாதியத் தன்மைக்குக் காரணம், கல்வி தங்குதடையில்லா தனியார்மயமாதலும், வணிகமயமாதலும், அரசு அனைவருக்கும் சம தரமுடைய கல்வி அளிக்கும் தன் அடிப்படைப் பொறுப்பை உதறித் தள்ளியதும்தான்.
பொதுப் பள்ளி முறைதான் அஸ்திவாரம்
உலகின் வளர்ச்சி அடைந்த அனைத்து நாடுகளும், இன்று வேகமாக வளரும் பல நாடுகளும் நிறுவியிருக்கும் கல்வி அமைப்பு ஒரே வகைப்பட்டதுதான். அருகமைப் பள்ளிகளைக் கொண்ட பொதுப் பள்ளி முறையில், அரசின் முழு நிதிப் பொறுப்பில், அனைத்துக் குழந்தைகளும், பெரும் பணக்காரரும், அடித்தட்டு ஏழைகளும் ஒரே பள்ளிகளில், அனைவரும் இலவசமாக, தாய்மொழி வழியே கற்கும் பள்ளிகள் மட்டுமே இந்த நாடுகள் அனைத்திலும் உள்ளன. இந்நாடுகளின் பெரும் வளர்ச்சியின் அஸ்திவாரமே இத்தகைய பொதுப்பள்ளி முறைதான். அமெரிக்காவோ, ஐரோப்பிய நாடுகளோ, குறிப்பாக பின்லாந்து, நார்வே, ஸ்வீடன் என்ற கல்வியில் ஒளிரும் ஸ்காண்டினேவிய நாடுகளோ, கிழக்கு ஆசிய நாடுகளோ… இவை அனைத்திலும் ஊன்றிச் செழித்திருப்பது இவ்வமைப்புதான்.
இத்தனை முன்னணி நாடுகளும் பொதுப் பள்ளி அமைப்பில் வைத்திருக்கும் அசைக்க முடியா நம்பிக்கையின் ஆதாரக் குறிக்கோள் என்ன? ஒரு நாடு தன் முழு மனித வள வளர்ச்சியைப் பெற வேண்டுமென்றால், அனைத்துக் குழந்தைகளுக்கும் சம வளர்ச்சி வாய்ப்பு அளிக்க வேண்டும். அப்போதுதான் அறிவு சுரந்து வரும், என்றைக்கும் பொய்யா பொங்கு மா கடலாக மாறும். அது அரசின் முதலீட்டில்தான் நடக்க இயலும்; இலவசமாக அளித்தால்தான் அனைத்துக் குழந்தைகளின் திறன் அக்கடலில் சேரும். இந்த நாடுகள் எல்லாம் சமத்துவ சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்ட சோஷலிச நாடுகள் அல்ல. அனைத்தும் முதலாளித்துவ நாடுகள். ஆனால், மக்கள் நல அரசுகள் (welfare states). இந்தியா மட்டும் இந்த வரலாற்றுப் பாதைக்கு விதிவிலக்காக முடியாது. மேற்சொன்ன இரு அடிப்படைகளின் மேல் இந்த மாற்றுக் கொள்கை எழுப்பப்படுகிறது.
முழுக்க முழுக்க இலவசக் கல்வி
1. அரசு அனைத்துக் குழந்தைகளுக்கும் 18 வயது வரை, சிறந்த சம தரமுடைய கல்வியை உறுதி செய்ய வேண்டும். இக்கல்வி அமைப்பு மேற்சொன்ன மற்ற நாடுகள் போன்று, அருகமைப் பள்ளிகளைக் கொண்ட பொதுப் பள்ளிகளாக இருக்க வேண்டும். தரமான முன் பருவக் கல்வி அனைத்துக் குழந்தைகளுக்கும் 3 வயதிலிருந்து அளிக்க வேண்டும்.
18 வயது வரை எந்தக் குழந்தையும், குடும்பத் தொழில் உட்பட்ட, எத்தகைய தொழிலிலும் ஈடுபடக் கூடாது. கல்வி தனியார்மயமாதலையும், வணிகமயமாதலையும் அனுமதிக்க இயலாது. கல்வி முழுதும் இலவசமாக அளிக்கப்பட வேண்டும். கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளுக்கு அனுமதி இல்லை.
அனைத்துப் பொருளாதார, சமூக மட்டக் குழந்தைகளும், எத்தகைய பாகுபாடுமின்றி ஒரே பள்ளிகளில் கற்க வேண்டும். ஒரு அருகமைப் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் அனைவரும் ஒரே பள்ளியில் படித்தல். தனியார் பள்ளிகள் கட்டணம் இன்றி, சேவை நிறுவனங்களாக இயங்கினால் அனுமதிக்கப்படலாம்.
தாய்மொழியே கல்வி மொழி
2. கல்விக்கான முழு நிதியும் அரசே செலவழிக்க வேண்டும். வளரும் தேவைகளுக்கும், ஒரு குழந்தையும் விடப்படாமல், அனைத்துக் குழந்தைகளும் சமமான கல்வி பெறுவதற்கு வேண்டிய நிதி ஒதுக்கப்பட வேண்டும். தேச வருமானத்தில் குறைந்த பட்சம் 6% என்று 1960-களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு இன்றுவரை 3.75%-க்கு மிகவில்லை. அமர்த்திய சென் சொல்கிறார், “ கல்விக்கும் சுகாதாரத்துக்கும், இந்திய அரசிடம் பணமில்லை என்று சொல்வது அப்பட்டமான முழுப் பொய்.”
3. தாய் மொழி / பிராந்திய மொழி ஒன்றே கல்வி மொழியாக ( medium) இருக்க வேண்டும்.
ஆங்கிலம் கல்வி மொழியாக அனுமதித்தல் கூடாது. ஆங்கில வழிக் கல்வி நம் வகுப்பறைகளைப் புரியாமை இருளில் மூழ்கடித்து, கல்வியை வெறும் மனனமாக்கி விட்டது. ஆனால், அதன் சர்வதேச முக்கியத்துவத்தை மனதில் கொண்டு, ஆங்கிலம் இரண்டாவது / மூன்றாவது மொழியாகச் சிறப்பாகக் கற்பித்தல். அதற்கு மற்ற ஆங்கிலம் பேசாத நாடுகளில் நிலவுவதைப் போன்று, ஒரு மொழியை இரண்டாவது மொழியாகக் கற்பிக்கும் தனிப்பட்ட கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்த வேண்டும்.
எந்த ஒரு மொழியையும் நாடு முழுதும் உள்ள அனைத்துக் குழந்தைகளும் கற்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் கூடாது.
ஒரு பிராந்தியக் குழந்தைகள் மற்றொரு பிராந்திய மொழியை, விருப்பத்துக்குகந்து கற்கும் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, வட மாநிலத்தவர், ஒரு தென்னிந்திய / வட கிழக்கு மொழியைக் கற்கலாம்.
கல்வியின் இலக்குகள்
4. கல்வித் திட்டம், பாடத்திட்டம், உள்ளடக்கம், கற்பித்தல் முறைகள் அனைத்தும் நம் அரசியல் சாசன விழுமியங்களை ஒட்டியே, சிறந்த தரமுடையதாக அமைக்கப்பட வேண்டும்.
மாபெரும் கல்வியாளர்கள், சமுதாயச் சிற்பிகள் ஆகியோரின் சிந்தனைகளில் மலர்ந்த லட்சியங்கள் கல்விக் கொள்கையின் ஆன்மாவாக விளங்க வேண்டும். பொருளாதார உற்பத்திக்கான திறன்களை வளர்ப்பதாக மட்டுமே கல்வி இருத்தல் கூடாது.
கல்வி மனித ஆற்றலைப் போற்றி வளர்க்கும் சமுதாய சாதனம். கல்வியின் நோக்கம் மனித நேயத்துடன் கூடிய ஜனநாயக, சமத்துவ, சமயம் சாராத சமூகத்தைக் கட்டி எழுப்புவதாகும். தனி மனிதரிடையே புதைந்திருக்கும் முழு ஆளுமையை வளர்த்தெடுப்பதும், அதை மொத்த சமுதாயத்தின் நலனுக்குப் பயன்பெற வைப்பதும் கல்வியின் இலக்குகளாகும். கல்வி சிலரின், லாபம், ஆதிக்கம், அதிகாரக் குவியல் ஆகியவற்றுக்கான சாதனமாக இருத்தல் கூடாது. கல்வி மாணவரிடம் சமூகப் பிரச்சினைகள் குறித்த உணர்வும், புரிதலும், அவற்றைத் தீர்ப்பதற்கான ஈடுபாடும் வளர்க்க வேண்டும். அத்துடன், ஆயிரம் பாகுபாடுகளும் ஒடுக்குமுறைகளும் கொண்ட நம் நாட்டில், பொருளாதார, சமூக அநீதிகளுக்கு உட்பட்டோரை மேலெழச் செய்யும் வலிமை மிக்க ஆயுதமாகக் கல்வி விளங்க வேண்டும்.
இத்தகைய கல்வித் திட்டத்தை உருவாக்குவதற்குப் பெரும் பாராட்டுகளைப் பெற்ற தேசிய கல்வித் திட்டம், 2005-ஐப் (National Curriculum Framework, 2005) பயன்படுத்தலாம்.
கல்வியில் ஆசிரியரின் பங்கு
வகுப்பறைக் கல்விக்கு அப்பால், மாணவரின் பல திறமைகள், படைப்பாற்றல் ஆகியவற்றை வளர்க்க, விளையாட்டு, சங்கீதம், ஓவியம் முதற்கொண்ட கலைகள் கற்றுத் தருதல். பல வளர்ந்த நாடுகளில் இத்தகைய திறமைகளும், பல தொழிற் திறமைகளும் அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாயப் பாடங்களாக மேல் நிலைக் கல்வி வரை கற்றுத் தரப்படுகிறது.
நவீன தகவல்-தொழில்நுட்ப உபகரணங்கள் அனைத்துப் பள்ளிகளிலும் சிறப்பாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.
ஆசிரியர் பயிற்சிக்குப் பெரும் முக்கியத்துவம் அளித்து, அதைப் பல ஆண்டுகள் நீடித்து, பணிக்காலம் முழுதும் தொடர்ந்து ஆசிரியர் தங்கள் அறிவையும், திறமைகளையும் வளர்க்கும் வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும். ஆசிரியர் பள்ளியின் அருகமை சமுதாயத்துடன் ஒன்றுகிற பண்புடையோராக விளங்க வேண்டும். கல்வித் திட்டம், பாடத்திட்டம், கற்பித்தல் முறைகளை உருவாக்குவதில் ஆசிரியருக்கு முக்கியப் பங்கு அளிக்க வேண்டும்.
அச்சுறுத்தும் தேர்வுகள் வேண்டாம்
5. அநேகமாக அனைத்து நாடுகளிலும், குறிப்பாக முன் குறிப்பிட்ட வளர்ந்த நாடுகள் அனைத்திலும் தேர்வுகளும், மாணவரை எந்த வகுப்பிலும் ஃபெயிலாக்குவதும் என்றோ கைவிடப்பட்டு விட்டன. அதே போன்று இங்கும் மாணவரை வருத்தி, அச்சுறுத்தும் தேர்வுகள் கைவிடப்பட வேண்டும். அந்நாடுகள் போல் ஆசிரியர் ஒவ்வொரு குழந்தையின் ஒவ்வொரு திறனையும் தொடர்ந்து நாள்தோறும் மதிப்பிடுதல்; பின் தங்கிய மாணவருக்குத் தனிக் கவனம் செலுத்தி திறன் பெறச் செய்தல் போன்ற முறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
மாணவர் போட்டி போடும் முறையைத் தவிர்த்து, குழுவாகக் கற்றல் போன்ற, ஒன்றுபடுதல், ஒத்துழைத்தல், மற்றவருடன் அனுசரித்தல், அவரைப் பாராட்டுதல் போன்ற பண்புகள் வளரும் முறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
நாடு முழுமைக்கும் ஒரே வகையான தேர்வு முறைகள் எந்த நாட்டிலும் இல்லை; இங்கும் கூடாது.
மாநிலப் பட்டியலில் கல்வி
6. கல்வி நிர்வாகத்தில் பெரும் மாற்றங்கள் தேவை. அதிகாரம் மையப்பட்டுக் கிடக்கும் நிலை மாறி, அதிகாரப் பரவலும், அதிகாரிகளின் கைகளிலிருந்து கல்வி மீட்கப்படுதலும் (de-bureaucratisation) தேவை.
கல்வி பொதுப் பட்டியலிலிருந்து, 1975-க்கு முன் இருந்தது போன்று, மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும். நாட்டின் கூட்டாட்சி முறையையும், சமூக - கலாச்சார - மொழிப் பன்முகச் செழுமையையும் காப்பாற்ற இது அத்தியாவசியம். மிகச் சிறிய நாடுகள் அன்றி, வேறு எந்த நாட்டிலும் கல்வி நாடு முழுவதற்கும் ஒன்றாக இல்லை. உயர் கல்வி உட்பட அனைத்துக்கட்டக் கல்வியிலும் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்.மாநில மையத்திலும் அதிகாரக் குவிப்பு கூடாது.
தமிழ்நாட்டில் 1970-களுக்கு முன் இருந்ததைப்போன்று, தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கல்வி நிர்வாகம் மாற்றப்பட வேண்டும். பள்ளிகள் பஞ்சாயத்துகள், நகராட்சிகளால் நிர்வகிக்கப்படுதல். அன்றாடக் கண்காணித்தல் பெற்றோர் குழுக்கள் கையில் ஒப்படைக்கப்படுதல்; அக்குழுக்களில் பெண்களுக்கும், எஸ்.சி / எஸ்.டி.யினருக்கும் தலா மூன்றில் ஒரு பங்கு ஒதுக்குதல். அனைத்து வளர்ந்த நாடுகளிலும் இத்தகைய கல்வி நிர்வாகம்தான் அமைந்திருக்கிறது.
அரசுப் பள்ளி ஆசிரியரிடையே இடமாற்றங்கள் பெரும்பாலும் தவிர்க்கப்படுதல்; பணிக்காலத் தொடக்கத்தில் ஒரு பள்ளியைத் தேர்வுசெய்து, அங்கேயே பணி உயர்வு பெறுதல்.
கல்வி நிலையங்கள் ஜனநாயகத்தின் தொட்டில்கள். மாணவர் ஒரு ஆரோக்கியமான ஜனநாயக சமுதாயத்தின் பிரஜைகளாக வளர்வதற்கான பயிற்சி மாணவப் பருவத்திலேயே அளிக்கப்பட வேண்டும். அனைத்து உயர் கல்வி நிலையங்களிலும், மேல்நிலைப் பள்ளிகளிலும் மாணவர் பேரவைகள் அமைக்கப்பட வேண்டும். அவற்றுக்கான தேர்தல்கள் ஜனநாயக முறையில் நடக்க வேண்டும். பள்ளி / கல்லூரி / பல்கலைக்கழக அதிகார அமைப்புகளில் மாணவருக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும்.
கற்றலில் தோல்வி
7. கொடிய ஏற்றத் தாழ்வுகளில் கட்டுண்டு கிடக்கும் இந்திய சமுதாயத்தில், அதனால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிப்பதுடன், பின் தங்கிய மாணவருக்கு, மற்றவர்களுக்குச் சமமான நிலை அடைய அனைத்தும் அளிக்கப்பட வேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி., சமூகக் கல்வி நிலையில் பிற்பட்டவர் அனைவருக்கும் அனைத்து மட்டக் கல்வியிலும், அனைத்து நிறுவனங்களிலும் ஒதுக்கீடு உறுதிப்படுத்தல். இப்பிரிவைச் சேர்ந்தவருக்கும் பெண்கள், மாற்றுத் திறனாளிகள், மாற்றுப் பாலினத்தினர் (transgenders) ஆகியோருக்கும் முழு உதவித்தொகையும், மற்ற நிதி உதவியும் ஆராய்ச்சிக் கல்வி வரை அளித்தல்; மேற்சொன்னவர்களுக்கு உண்டு-உறைவிடப் பள்ளிகளும், விடுதிகளும் பெரும் எண்ணிக்கையிலும், தரமானவையாகவும் அமைத்தல்.
கல்வி நிறுவனங்களில் அனைத்துப் பாகுபடுத்தலும் தடுக்கப்பட்டு, குற்றம் புரிவோர் தண்டிக்கப்படுதல்.மேற்குறிப்பிட்டவை சில முன்னுரிமை பெறுபவை மட்டுமே.
சுதந்திர இந்தியாவின் மாபெரும் தோல்வி, இமாலயத் தோல்வி கல்வியில்தான் ஏற்பட்டிருக்கிறது.
நாட்டின் அனைத்துக் குழந்தைகளும், இளைஞர்களும், கூர்ந்த அறிவும், சிறந்த திறமைகளும் பெற்று, தங்கள் மலர்ச்சிக்கும், சமுதாய வளர்ச்சிக்கும் தங்கள் பங்கைச் செலுத்தும் கல்வி அமைப்பை நிறுவ இந்தியா தவறிவிட்டது. இந்தியாவின் பிரம்மாண்டமான மக்கள்தொகை அனுகூலம் (demographic dividend) நமது வர்க்க-சாதிக் கல்வி அமைப்பால் பயனளிக்கும் திறமை இழந்து கிடக்கிறது. காலம் தாழ்த்தியேனும், இன்றைய பாதையினை மாற்றி, புதிய பாதையில் பயணம் தொடங்க வேண்டும்.
- வே.வசந்திதேவி, முன்னாள் துணை வேந்தர், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
தொடர்புக்கு: vasanthideviv@gmail.com
இந்தியக் கல்வியின் இந்த வர்க்க-சாதியத் தன்மைக்குக் காரணம், கல்வி தங்குதடை யில்லா தனியார்மயமாதலும், வணிகமயமாதலும், அரசு அனைவருக்கும் சம தரமுடைய கல்வி அளிக்கும் தன் அடிப்படைப் பொறுப்பை உதறித் தள்ளியதும்தான்!
Keywords: நம் கல்வி... நம் உரிமைகல்விக் கொள்கை,