நம் கல்வி... நம் உரிமை!- கீழ்ப்படிய மட்டும் சொல்லும் கல்விக் கொள்கை
தனிப்பட்ட மனிதருக்கு மட்டுமல்ல, முழுச் சமுதாயத்துக்கும் பயன்படும்வகையில்
அரசாங்கத்தின் விதிகளையும் வரையறைகளையும் உருவாக்குவதே பொதுக்கொள்கை
என்பார் அமெரிக்கப் பேராசிரியர் டக்ளஸ் கொமெரி. சமுதாயத்தின் பல்வேறு
சமூகக் குழுக்களையும் மனதில்கொண்டு அரசின் கொள்கைகளை உருவாக்கச் சிறப்பான
வழி அதுவே. நமது நாட்டிலும் தேசிய கல்விக் கொள்கை 2016 -ஐ உருவாக்குவதற்கான
கடைசிக்கட்டத்தில் நாம் இருக்கிறோம்.
கல்வியில் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தவர் அமெரிக்கக் கல்வியாளர் ஜான்
திவே. நூறாண்டுகளுக்கு முன்னால் அவர் துருக்கி நாட்டின் கல்விச்
சீர்திருத்தங்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். சமூகத்துக்குத் தேவையான
முறையில் எப்படிப்பட்ட நோக்கங்களுக்குக் கல்வி சேவை செய்யும் என்பதில்
தெளிவு வேண்டும். கல்வி சார்ந்த என்ன மாதிரியான குறிக்கோள்களை அது சாதிக்க
விரும்புகிறது என்பதிலும் அரசுக்குத் தெளிவு வேண்டும். தெளிவில்லாமல்
செய்யப்படும் சீர்திருத்தங்களெல்லாம் அரைகுறையாக முடிந்துவிடுவதுடன்
எதையும் சாதிக்க முடியாமல், புதிய சிந்தனைகளின் முன்னால் நிற்க முடியாமல்
கடைசியில் கைவிடப்படுவதே அதன்தலைவிதி. அப்படி இருந்தால் மட்டும்தான்,
அரசால் அதற்கான செயல்பாடுகளையும் நடவடிக்கைகளையும் எடுக்க முடியும் என்றார்
அவர். அந்தத் தெளிவு இல்லை என்றால், அந்தச் சீர்திருத்தம் சரியாக வராது.
எதையும் சாதிக்க முடியாமல் கடைசியில் கைவிடப்படுவதே அதன் தலைவிதி. அதன்
பிறகு, புதிய கருத்துகள் உருவாகும்.
திவே சொல்வதையே இன்னொரு கல்வியாளரான சி.வின்ச்சும் எதிரொலிக்கிறார்.
பொதுக்கல்விக்கான ஒரு கொள்கை தெளிவாக விவாதிக்கப்பட வேண்டும். அதன்
நோக்கங்கள் தெள்ளத் தெளிவாக விளக்கப்பட வேண்டும். அப்படியில்லை என்றால்,
மறைமுகமான நோக்கங்களை அந்தக் கொள்கை வைத்திருக்கிறது என்று சொல்லலாம்.
சமூகத்தின் அதிகாரம் படைத்த பிரிவினர் பயனடைவதற்கு அது வாய்ப்பளிக்கும்.
ஓரங்கட்டப்பட்ட மக்கள் அதனால் சமூகத்தின் மீது நம்பிக்கையிழப்பார்கள். ஒரு
கல்விக் கொள்கை தனது நோக்கங்களைத் தெளிவில்லாமல் பேசி மற்றவர்களைக்
குழப்பினால் அதுவும் ஒரு தப்பிக்கும் தந்திரமே என்கிறார் ஆர்.எஃப்.டியர்டன்
எனும் கல்வியாளர். அப்படியான சிலவகை சீர்திருத்தங்களில் அனைத்து மக்களும்
ஈடுபட்டாலும் சரி. இறுதியில் முடிவெடுக்கிற அதிகாரம் ஒரு சிலர் கையில்
சிக்கிவிடும்.
கல்வியின் சமூக நோக்கம்
தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கை 2016-ன்
முன்வடிவில் உள்ள நோக்கங்களை நாம் சரியாக ஆய்வுசெய்ய வேண்டியது அவசியம்.
அப்போது தான் நம்மால் அதன் பரிந்துரைகளையும் அதன் பேரில் எடுக்கப்பட உள்ள
நடவடிக்கைகளையும் சரியாகப் புரிந்துகொள்ள முடியும். வெளியில் சொல்லப்படுகிற
குறிக்கோள்கள் எப்போதும் கல்வியைத் தீர்மானிப்பதில்லை. புதிய கல்விக்
கொள்கை பரிந்துரைக்கிற செயல்களை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு மறைமுக
நோக்கங்கள் பற்றிய புரிதல் அவசியம். நான் இந்தப் புதிய கல்விக் கொள்கையின்
நோக்கங்களை 1968, 1986 வருடங்களில் வெளியான முந்தைய தேசிய கல்விக்
கொள்கைகளின் பின்னணியில் புரிந்துகொள்ள முயல்கிறேன். கல்வியின் சமூக
நோக்கத்தை இந்தியாவின் தேசிய லட்சியங்களோடும் தேசத்தைக் கட்டியமைக்கிற
பணியோடும் நெருக்கமாகப் பிணைக்கிற பணியை அந்த இரண்டு கல்விக் கொள்கைகளும்
முன்வைக்கின்றன.
தேசிய இலக்குள் இவைதான்: ஜனநாயகத் தன்மையுள்ள பொருளாதார வளமான தேசம், அதன்
பண்பாட்டில் வேர்கொண்டிருக்க வேண்டும். ஆனால், தனது பண்பாட்டில் உள்ள
குறைகளையும் அது அறிந்திருக்க வேண்டும். அந்த தேசம் உள்நாட்டில் நன்றாக
ஒருங்கிணைந்ததாக இருக்கும். வெளியிலிருந்து வரும் ஆக்கிரமிப்புகளிலிருந்து
தன்னைப் பாதுகாத்துக்கொள்வதாகவும் அது இருக்கும்.
சமத்துவம், நீதி, சுதந்திரம், கண்ணியத்தை எல்லாக் குடிமக்களுக்கும்
உறுதிசெய்கிற ஒரு பல வண்ண சமூகத்தைக் கடந்த காலக் கல்விக் கொள்கைகள் மனதில்
கொண்டிருந்தன. சமூக ஒருங்கிணைவும் சகோதரத்துவமும் குடிமக்களிடம்
காணச்செய்வது அவற்றின் முக்கியமான சமூகக் குறிக்கோள்.
கொள்கையும் சமூகச் சித்தாந்தமும் மதநடுநிலை, அறிவியல் ஆர்வத்தின்
அடிப்படையில் இருக்க வேண்டும். 1968-ல் வெளியான மத்திய அரசின் கல்விக்
கொள்கை மனிதவள மேம்பாட்டையும் கல்வியின் பொருளாதார நோக்கங்களையும்
வலியுறுத்தியது. ஆனால், ஒரு ஜனநாயகச் சமூகத்தை உருவாக்குவதில் கல்வியின்
உள்ளார்ந்த ஆற்றலையும் மனதில் கொண்டது.
1986-ல் வெளியான கல்விக் கொள்கை தனிநபர் சுதந்திரத்தின் மீது அதிகமாகக்
கவனம் செலுத்தியது. அந்த இரண்டு கல்விக் கொள்கைகளுமே நாட்டின் கல்வி செய்ய
வேண்டிய சமூகக் குறிக்கோள்களைப் பட்டியலிட்டன. அவற்றை அடைய வேண்டும்
என்பதில் தெளிவாக இருந்தன. மாணவர்களிடம் அதற்கான திறன்களைக் கல்வி வளர்க்க
வேண்டும் என்பதிலும் அவை தெளிவாக இருந்தன. அத்தகைய திறன்களை உடைய
குடிமக்கள்தான் சமூகக் குறிக்கோள்களை அடைய முடியும். தனிநபர்களின் அத்தகைய
திறன்களும் ஜனநாயகப் பண்புகளும், திறந்த மனதுடனான அணுகுமுறையும் இந்தியப்
பண்பாடு பற்றிய பெருமிதமும் புதியன படைக்கும் சிந்தனையும் அதற்கு உதவும்.
பலமான அறிவுத் தளத்தை உருவாக்க வேண்டும் என்னும் கல்வியின் நோக்கங்களும்
அதில் இணையும்போது செயலூக்கமான படைப்பாற்றல் மிக்க குடிமக்களை உருவாக்க
முடியும்.
மாணவர்களிடம் இத்தகைய திறன்களையும் நோக்கங்களையும் வளர்த்தெடுப்பது,
கல்விக் கொள்கையின் சமூகக் குறிக்கோள்களுடனும் சமூகம் பற்றிய பார்வையுடனும்
தொடர்புள்ளது. சமூகம் பற்றிய பார்வையில் புதிய கல்விக் கொள்கை 2016-க்கான
முன்வடிவு வேறுபட்டுள்ளது. சமூகத்தின் நோக்கங்களையும் கல்வியின்
நோக்கங்களையும் புரிந்துகொள்வதிலும் அவற்றை விளக்குவதிலும் அது
வித்தியாசமானதாக உள்ளது. உண்மையில், வெளிப்படையான ஜனநாயக விரோதம் எதுவும்
அதில் இல்லை. வெளிப்படையான குறுகிய மனப்பான்மையும் அதில் இல்லை. ஆனாலும்,
அது முன்வைக்கிற கருத்துகள் அவசியம் விவாதிக்க வேண்டியவை.
தேசியக் குறிக்கோள்களில் குழப்பம்
அதன் முதல் உறுத்தலாக இருப்பது சமூகம் பற்றிய அதன் பார்வை. ‘வேகமாக
மாறிக்கொண்டிருக்கிற, எப்போதும் உலகமயமாகிற, அறிவை அடிப்படையாகக்கொண்ட
பொருளாதாரத்தையும் சமூகத்தையும்’ பற்றி அது பேசுகிறது. இத்தகைய மாற்றங்கள்
கடவுளால் தரப்பட்டவை. அவை மனித வாழ்வு மீதும் வாழ்க்கைத் தரம் மீதும்
ஏற்படுத்துகிற தாக்கங்களைப் பற்றிய விமர்சனம் தேவையில்லை. இத்தகைய
மாற்றங்களைக் கொண்டுவந்த சக்திகள் கண்ணில் காண முடியாதவை. அவை எதிர்கொள்ள
முடியாதவை என்பதுபோல கல்விக் கொள்கை பேசுகிறது. அதனால், இந்தியாவின்
முன்னால் இருக்கிற ஒரே வாய்ப்பு தற்போதைய மாற்றத்தின் போக்கோடு கலந்து
நாமும் பயணிப்பதுதான்.
சமூக அக்கறைகள், பிரிவினைகள், சமூக நீதிப் பிரச்சினைகள், ஜனநாயகம் பற்றி
ஆங்காங்கே குறிப்பிடத்தான் செய்கிறது கல்விக் கொள்கையின் முன்வடிவு. ஆனால்,
அதன் கண்கள் எப்போதும் ‘அறிவை அடிப்படையாகக்கொண்ட பொருளாதார’த்தின் மீதே
நிலைகுத்தி நிற்கின்றன. இதை உருவாக்கியவர்கள் கருத்துரீதியாகக்
குழம்பியுள்ளனர். நியாயமான சமத்துவச் சமூகத்தை உருவாக்குதல் போன்ற தேசியக்
குறிக்கோள்களில் குழம்பியுள்ளனர். கல்வித் துறையின் இலக்கான அனைத்துக்
குழந்தைகளையும் பள்ளியில் சேர்ப்போம் என்பதிலும் நீதியும் சமத்துவமும்
கொண்ட பண்புகளை மாணவர்களிடம் உருவாக்குகிற விஷயத்திலும் குழம்பியுள்ளனர்.
கல்விக் குறிக்கோள்கள் எனும் தலைப்பில் உள்ளவை எல்லாம் பெரும்பாலும் கல்வி
இலக்குகள்தான். ஆனால், உண்மையில் கல்வியின் குறிக்கோள்கள் ஆங்காங்கே இந்தக்
கொள்கை அறிக்கையில் மின்னுகின்றன. ஆனால், ஒருவர் அவற்றைப் புரிந்துகொள்ள
வேண்டுமென்றால், அவற்றைத் தொகுத்து ஓரிடத்தில் வைத்துதான் புரிந்துகொள்ள
முடியும். அவற்றைத் தொகுத்தால் நான்கு பெரிய ரகங்களாக இருக்கின்றன. அவை
மகிழ்ச்சி தரக்கூடிய வேலைக்கான திறன்கள், பண்பாட்டுப் பாரம்பரியம்,
வாழ்க்கைக்கான பண்புகள், அறிவு என்ற பிரிவுகளாக இருக்கும்.
இந்த கல்விக் கொள்கை தருகிற அழுத்தம் திறன்களைப் பற்றியதுதான் என்பது
தெளிவாகத் தெரிகிறது. திறன்கள் பற்றிய பரிந்துரைகள் ஒவ்வொரு துறையிலும்
ஓங்கி நிற்கின்றன. கல்வியின் மிக முக்கியமான இலக்கு என்பது வேலைக்கு
ஏற்றாற்போல மனிதர்களை உருவாக்குவதுதான். வேலைக்கான திறன்கள் என்பவைகூடத்
தற்போதைய அமைப்பு முறையைப் பின்தொடர்வதற்காகத்தான். அவற்றை எதிர்கொள்ளவோ,
மேம்படுத்தவோ அவற்றை வளர்த்தெடுப்பதற்கானவையாகக்கூட அவை இல்லை.
பண்பாட்டுப் பாரம்பரியம் என்பது பண்டைக்கால இந்தியாவின் பண்பாடுதான். பல
வண்ணப் பண்பாடு, பன்முகத்தன்மை, சகிப்புத்தன்மை உள்ளிட்டவற்றை அது
குறிப்பிட்டாலும் ஓரிடத்தில் அறிவின் உலகத்துக்குப் பண்டைக்கால இந்தியா
தான் பங்களித்தது என்று விளக்குகிறது. அரவிந்தர் சொல்கிறபடி, மீதம்
இருக்கிற 21-ம் நூற்றாண்டு இந்தியாவுக்குச் சொந்தமானது என்கிறது அறிக்கை.
அதை நாம் எந்த அர்த்தத்திலும் எடுத்துக்கொள்ளலாம். குறுகிய மனப்பான்மைக்கான
வெளிப்படையான அறிவிப்புகள் எதுவும் இல்லைதான். ஆனாலும் மற்ற பண்பாடுகள்
பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. பண்டைய இந்திய நாகரிகம் பற்றிய
விவரிப்புகள்தான் இருக்கின்றன.
பொறுப்புள்ள குடிமகனை விளக்குதல்
பண்புகள் பற்றிய பகுதியில் நீதி, சமத்துவம் மற்றும் காலந்தவறாமை முதலாக
ஏறத்தாழ அனைத்தும் குறிப்பிடப்பட்டுள்ளன. நுணுக்கமாக இதனை
நெருங்கிப்பார்த்தால் இந்தப் பண்புகள் குடியுரிமைக்கும்
சுதந்திரத்துக்குமான தரங்களாகத் தன்னை வெளிப்படுத்துகின்றன. இந்தியாவின்
கல்வி தனது இந்தக் கொள்கையின் மூலமாக, ‘சுதந்திரத்தைப் பொறுப்புடன்
கையாள்கிற’, ‘பொறுப்புள்ள குடிமக்க’ளை உற்பத்தி செய்வதற்கு முயற்சி
செய்யும். வேலைக்கான திறன்கள், விமர்சனபூர்வமான அறிவு இல்லாமலிருப்பது
ஆகியவற்றின் மீது மிகுந்த அழுத்தத்தைத் தருகிறது இந்தக் கொள்கை அறிக்கை.
இந்தப் பின்னணியி லிருந்து ஒருவர் இதை வாசித்தால், ஒரு நல்ல குடிமகன்
என்பவர் அரசுக்கும் அரசியல் அதிகாரத்துக்கும் இணங்கியவர். அரசின் நல்ல
தன்மையின் மீது முழுமை யான நம்பிக்கை வைத்துள்ளவர். இன்றைய சமூக அமைப்பு
முறையை ஏற்றுக்கொண்டவர். அவர்தான் நல்ல குடிமகன்.
அரசும் சமூகமும் பெரும்பான்மையான மக்களுக்கு அநீதி செய்தால் அதற்குத்
தானும் பொறுப்பு என்று நினைத்துக்கொள்கிற குடிமக்களுக்கு இதில் இடமில்லை.
அரசாங்கத்தின் செயல்பாடுகளையும் கொள்கைகளையும் எதிர்க்கிற,
குடிமக்களுக்கும் இதில் இடமில்லை. இந்தக் கொள்கை அறிக்கையின்படி தேவையான
ஒரே அறிவு என்பது வேலைக்கான திறன்கள் போன்ற அறிவுதான். அது இந்தியாவின்
பணியாளர்கள் சிறந்த முறையில் செயல்திறனை வெளிப்படுத்த வேண்டும். அதற்குத்
தேவையான முறையில் தொடர்ந்து மாறுகிற திறன்கள் பற்றிய அறிவை வழங்குவதே
இந்தக் கல்விக் கொள்கையின் முக்கியமான நோக்கம். அறிக்கையில்
விவாதிக்கப்படுகிற இந்தியப் பாரம்பரிய அறிவு ஒரு விதிவிலக்கு. அது நமது
நாட்டின் பண்பாட்டுப் பாரம்பரியம் பற்றிய விழிப்புணர்ச்சியை
ஏற்படுத்துவதற்காக இதில் பேசப்படுகிறது. உலகு, இயற்கை, சமூகம், மனித வாழ்வு
பற்றிய புரிதல், பல்வேறு துறைகளில் மனிதச் சாதனைகள் பற்றிய பெருமை
கொள்ளல், அறிவுசார் மகிழ்வு உள்ளிட்ட எதையும் புரிந்துகொள்வதற்கான அறிவு
எதுவும் இந்தக் கொள்கை அறிக்கையில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. அறிவைப்
பற்றி அது குறிப்பிடப்படுகிற ஒவ்வொன்றும் பொருளாதாரத்தோடும் திறன்களை
வளர்த்துக்கொள்வதற்கான அறிவோடும் மட்டுமே தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.
மனிதரைப் பற்றிய அறிவு, சிக்கலான பண்பாட்டு நெறிமுறைகளைப் பற்றிய அறிவு,
இன்றைய உலகில் வாழ்வதற்கு உரியது எது? மரணிப்பது எது என்பது பற்றி சொந்தமாக
ஒரு முடிவுக்கு வருவதற் கான எந்த வாய்ப்பும் இந்த கல்விக் கொள்கையில்
தரப்படவில்லை.
எப்போது அரசையும் அரசாங்கத்தையும் ஆதரிக்க வேண்டும், எப்போது பாராட்ட
வேண்டும், எப்போது எதிர்க்க வேண்டும் என்பதற்கான அறிவு தேவையில்லை.
சுருக்கமாகச் சொன்னால், பகுத்தறிவுடன் சொந்த அறிவோடு இருப்பவராக
இருந்துகொண்டே மொத்த மனித குலத்தோடும் இணங்கியிருப்பவராக வாழ்வதற்குத்
தேவையான அறிவைப் பற்றிய புரிதல் இந்தக் கல்விக் கொள்கையில் இல்லை என்பது
வெளிப்படையாகத் தெரிகிறது. அரசாங்கம் சொல்வதுபோலக் கேட்கிற, அதை நம்புகிற,
கீழ்ப்படிகிற, உற்பத்தி செய்கிற, எல்லாவற்றுக்கும் அடங்கிப்போகிறவர்களான
குடிமக்களையும் சிந்திக்காத, கேள்வி கேட்காதவர்களையும் உருவாக்குவதற்கான
கல்விக் கொள்கை என்று இதைச் சொல்லலாம்.
குடிமை உரிமையைக் கொச்சைப்படுத்தி, அதிலிருந்து ஒரு கல்வி முறையை
உருவாக்குவதற்கான கொள்கை இது. நெருக்கடிகள் வரும்போது சொந்தமாக முடிவுகள்
எடுத்து ஒருவர் செயல்பட வேண்டும். தெளிவாகவும் விமர்சனபூர்வமாகவும்
சிந்திக்க வேண்டும். அத்தகைய குடிமக்களைத்தான் உயிர்ப்போடு இருக்கும்
ஜனநாயகம் நம்பியுள்ளது. அதை மீண்டும் நினைவில் கொள்ள வேண்டிய தருணம் இது.
அறிவைச் சார்ந்துள்ள பொருளாதாரங்கள் என்று சொல்லப்படும் ஜனநாயக நாடுகள்
கேள்வி கேட்காமல் கீழ்ப்படிகிற, உற்பத்தி மையங்களைச் சார்ந்திருப்பதில்லை.
அந்த நாடுகள் நிலைத்து நிற்பதற்கு அவை ஒன்றும் காரணம் அல்ல. ஆனாலும், நமது
2016 புதிய கல்விக் கொள்கை அத்தகைய கீழ்ப்படிதலைத்தான் தனது எதிர்கால
லட்சியமாகக்கொள்கிறது.
- ரோஹித் தங்கர், ராஜஸ்தானைச் சேர்ந்த கல்வி ஆலோசகர்,
© ‘தி இந்து’ ஆங்கிலம்
தமிழில்: த.நீதிராஜன்
No comments:
Post a Comment