நம் கல்வி... நம் உரிமை!- என்னவாகும் உயர்கல்வியின் எதிர்காலம்?
ஒரு தேசத்தின் எதிர்காலம் அதன் கல்விச்சாலைகளிலேயே நிர்ணயிக்கப்படுகிறது.
ஒரு அரசு முன்வைக்கும் கல்விக் கொள்கையின் மீதே அந்த எதிர்காலம்
கட்டமைக்கப்படுகிறது. மோடி அரசு கொண்டுவரவிருக்கும் புதிய கல்விக்
கொள்கையின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்திருக்கும் ‘தி இந்து’, இது
தொடர்பிலான விவாதத்தை நம்முடைய பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள்,
கல்வியாளர்கள் என அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் கொண்டுசெல்ல வேண்டியதன்
பொறுப்பையும் உணர்ந்திருக்கிறது. இதன் நிமித்தம் இந்த வாரம் முழுவதும்
நடுப்பக்கத்தில் இது தொடர்பிலான கல்வியாளர்களின் கட்டுரைகள், பேட்டிகள்
வெளியாகின்றன. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, உயர்கல்வியில்
ஏற்படுத்தப்போகும் தாக்கம் பற்றி இன்றைக்குப் பார்ப்போம்.
உலகின் மூன்றாவது பெரிய உயர் கல்விக் கட்டமைப்பைக் கொண்ட நாடு இந்தியா.
நாடு விடுதலை அடைந்த காலத்தில் இருந்ததைப் போன்று பல்கலைக்கழகங்கள் 34
மடங்கு வளர்ச்சியடைந்திருக்கின்றன. கல்லூரிகள் 74 மடங்கு
வளர்ச்சியடைந்திருக்கின்றன. உயர்கல்வியில் ஏற்படும் ஒவ்வொரு முன்னேற்றமும்
நாட்டின் வளர்ச்சிக்கும், எதிர்காலத்தை வளமாக்குவதற்கும் பெரிய அளவில்
துணைபுரியும் என்பதில் சந்தேகமில்லை. உயர்கல்வி மேம்பட, கடந்தகால, நிகழ்கால
உயர்கல்வி நிலைமைகளைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். கள ஆய்வுகள், நல்ல
விவாதங்கள் நடைபெற வேண்டும். இறுதியாக, கொள்கை முடிவுகள் மேற்கொள்ளப்பட
வேண்டும். குறைந்தபட்சம் ஒரு பத்தாண்டுக்கு அது ஆவணமாகத் திகழ வேண்டும்.
உயர்கல்வி முடிவுகளை எடுக்க உறுதுணையாக இருக்க வேண்டும்.
அப்படியான ஒரு ஆவணம், ஒரு கல்விக் கொள்கை தயாரிக்கப்பட இருப்பதாக அறிந்து
ஆவலுடன் காத்திருந் தோம். முப்பதாண்டுகளுக்குப் பிறகு உருவாகியிருக்கும்
புதிய கல்விக் கொள்கை தொடர்பான அந்த ஆவணம், நம் நம்பிக்கைகளைச் சிதைப்பதாக
உள்ளது.
எது தீர்வு?
டி.எஸ்.ஆர். சுப்ரமணியம் குழு பரிந்துரை அடிப் படையில் அமைந்துள்ளதாக
நம்பப்படும் ‘2016-ம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கைக்கான சில உள்ளீடுகள்’
என்ற மத்திய மனிதவளத் துறையின் ஆவணம் உயர்கல்விச் சிக்கல்களைப் பற்றிப்
பேசுவதாகச் சிலர் குறிப்பிடுகிறார்கள். உயர் கல்வித் துறையில் சிக்கல்கள்
இல்லாமல் இல்லை. மூன்றில் இரண்டு பங்கு பல்கலைக்கழகங்கள், 90% கல்லூரிகள்
சராசரிக்கும் கீழாகத் தரம் குறைந்தவை. துணைவேந்தர்கள் நியமனங்களோ, சாதி,
சமய அரசியல் சார்புத்தன்மை கொண்டதாகவும் லஞ்ச லாவண்யம் சார்ந்ததாகவுமே
மாறிவிட்டது என்று கூறினார் 2007-ல் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.
தமிழ்நாட்டுக் கல்வி நிலைமைகளை அறிந்தவர்களுக்கு இது புதிய விஷயம் இல்லை.
இந்திய உயர்கல்வித் துறையின் அவலங்கள் இவ்வளவுதானா? இக்குழு கண்டறிந்து
வெளிச்சத்துக்குக் கொண்டுவராத அவலங்கள், சிக்கல்கள் பல. அவற்றை
அறிந்திருந்தால் மட்டுமே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.
ஆளுகைச் சீர்திருத்தம்
இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களை நிர்வகித்து வரும் பல்கலைக்கழக மானியக்
குழு, அகில இந்திய தொழில்நுட்பக் குழுமம், மருத்துவக் கல்விக் குழுமம்
ஆகியவற்றைக் கலைத்துவிட்டு, அவற்றுக்குப் பதிலாக ஒற்றை நிறுவனம் ஒன்றை
அமைக்கப் பரிந்துரைத்தது சுப்ரமணியம் குழு. ஆனால் அப்படியெல்லாம் வெளிப்
படையாகக் கூறாமல், அதைப் பூடகமாகப் பேசுகிறது அரசு வெளியிட்டிருக்கும்
ஆவணம்.
கல்வித் துறையை நிர்வகிக்க இந்தியக் கல்விப் பணித் தேர்வு முறையைக்
கொண்டுவர அரசு முயலும் என்கிறது இந்த அறிக்கை. தேர்வுகளும் தேர்வு
வாரியங்களும் மட்டுமே ஆளுகைச் சீர்திருத்தங்களை அள்ளி வழங்கிவிடாது. இன்றைய
குடிமைப் பணியில் தேர்வுப் பணியில் தேர்வுபெற்று வருபவர்களில் கல்வியில்
ஆர்வமுள்ளவர்களை அழைத்து அதில் நிபுணத்துவம் பெறக் கோரி இப்பணிகளை
நிர்வகிக்கக் கோரலாம். கல்விப் பணிக்கு எத்தகைய தேர்வு முறைகளை வைத்துத்
தேர்வு செய்கிறோம் என்பதல்ல. தேர்வுக்குப் பிறகு அவர்கள் என்ன கற்றுக்
கொள்கிறார்கள், அப்பணியை எப்படி அணுகுகிறார்கள், நிர்வகிக்கிறார்கள் என்பதே
முக்கியம். இன்றைக்குப் பெரும்பான்மையான உயர்கல்வி நிறுவனங்கள் தனியார்
கல்வி நிறுவனங்களாகிவிட்ட நிலையில், அங்குள்ள ஆசிரியர், மாணவர்கள்,
கல்விசார் பிரச்சினைகள் எல்லாம் ஜனநாயகத்தன்மையற்ற நிலைமைகள் உருவான
சூழலில் இதற்கென அமைக்கப்படும் தீர்ப்பாயங்களுக்கு என்ன தேவையிருக்கும்,
தற்போது உள்ள நீதிமன்றங்களை அணுகுவதில் என்ன சிக்கல் என்பன போன்ற
கேள்விகளுக்கும் விடையில்லை.
பொதுச் செலவில், உயர்கல்வி உதவித்தொகையாக வழங்கும் பணத்தின் அளவு பாதியாகக்
குறைந்துவிட்டதைப் புள்ளிவிவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. உயர்கல்வி
நிறுவனங்களில் எங்கெல்லாம் ஜனநாயகம் உயிர்ப்புடன் இயங்குகிறதோ,
அங்கெல்லாம், கல்வித் தரம், கற்றல் கற்பித்தல் முறைகள், புதியன காணும்
போக்கு அதிகமாக இருப்பதைக் காண முடியும். இந்நிலையில், முன்னணியில் இருந்த
பல உயர்கல்வி நிறுவனங்கள், அதில் பயிலும் மாணவர்களின் செயல்பாடுகளை முடக்க,
கல்வி உதவித்தொகையை முடக்க நுட்பமான பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு
கல்வி நிறுவனத்தால் பாதிக்கப்படும் மாணவன் நேரடியாக நீதி கேட்க
நீதிமன்றத்தை அணுகும் வாய்ப்பை மறுக்கும் ஏற்பாடுகள் இந்தப் பரிந்துரையில்
இருப்பது அச்சம் தருகிறது.
உயர்கல்வியில் கட்டுப்பாடு
ஆளுகைச் சீர்திருத்தம் என்ற பெயரில் ஏராளமான கட்டுப்பாடுகள்
பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. அது தவிர தனியாக ‘கட்டுப்பாடு’ என்ற
தலைப்பில் சில ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதில் சில தேவையற்றவை.
ஏற்கெனவே நடப்பில் உள்ளவை. உயர் கல்வி ஆராய்ச்சி நிதியைச் சுருக்க ஒரு
பரிந்துரை இருக்கிறது. மத்திய புள்ளியியல் முகமைக்கான முன்மொழிவு
இருக்கிறது. ஏற்கெனவே புள்ளிவிவரச் சேகரிப்புக்குப் போதுமான மத்திய அரசு
நிறுவனங்கள் உள்ளன. புதிய வகைப்பாட்டுப் புள்ளிவிவரங்கள் தேவையெனில்,
தற்போதுள்ள நிறுவனங்கள் மூலமே அவற்றைப் பெற இயலும். ஏற்கெனவே கிடைக்கும்
புள்ளிவிவரங்களின் நம்பகத்தன்மையை அதிகரிப்பதுதான் இன்றைய தேவை. ஆனால்,
அதற்கு எந்தவொரு முன்மொழிவும் இல்லை. மேலும், ‘உயர்கல்வியில் கட்டுப்பாடு’
என்ற தலைப்பில் தரமதிப்போடு இணைத்து நிதியைச் சுருக்கும் திட்டமும்
பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
உயர்கல்வி தரம்
நம் நாட்டு உயர்கல்வி வளர்ச்சிக்கும் தரத்துக்கும் பெருத்த வேறுபாடு உண்டு
என்பதுதான் முக்கியமான பிரச்சினை. தனியார் பங்கு அதிகரிக்க, அதிகரிக்க தரம்
குறைந்துகொண்டே வருவதையும் பார்க்க முடியும். “எந்தத் தரக் கட்டுப்பாடும்
தேவையில்லை. வணிகர்களும் அரசியல்வாதிகளும் கல்வி நிறுவனங்கள் தொடங்குவதைத்
தடைசெய்தாலே போதும்” என்றார் பேராசிரியர் மு.அனந்தகிருஷ்ணன். இதுபோன்ற
விஷயங்களை ஆராய்ந்து, அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான வழிவகைகள்
மேற்கொள்ளப்பட வேண்டும். அதை விட்டுவிட்டு, தர மதிப்பீடுகள் என்ற பெயரில்
மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் அரசின் பங்கைக் குறைக்கும் முயற்சியே!
தொலைதூரக் கல்வி
உயர்கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று கற்க வாய்ப்பில்லாதவர்களுக்கு
ஒரு வரப் பிரசாதம்தான் தொலைதூரத் திறந்தவெளிக்கல்வி. ஆனால்
பல்கலைக்கழகங்களின் நிதிச்சுமையை அரசுகள் ஏற்காத நிலையில், தொலைதூரக்
கல்வியைப் பல்கலைக்கழகங்கள் ஒரு பொன் முட்டையிடும் வாத்தாகப் பாவிக்கத்
தொடங்கின. பல்கலைக்கழகத்தின் இதர துறைகளால் செலவு அதிகரிக்கும்போது,
தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் மூலம் லாபத்தைப் பெருக்கத் தொடங்கின.
பல்கலைக்கழகப் பணத் தேவைகள் நெறிமுறைகளை மீறி, தொலைதூரக் கல்வியை லாபம்
ஈட்டும் கருவியாக மாற்றின. விளைவு, தொலைதூரக் கல்வியின் தரம் பெருமளவு
பாதிக்கப்பட்டுவிட்டது. இதைச் சரிசெய்வதற்கான எந்த முன்மொழிவுகளும் மத்திய
மனிதவளத் துறை வெளியிட்டிருக்கும் ஆவணத்தில் இல்லை.
கல்வி பன்னாட்டு மையம்
கல்வியை ஒரு சந்தைப்படுத்தும் பொருளாகப் பார்க்கத் தொடங்கிய காலம்
முதல்தான் ‘கல்விச் சர்வதேசமயமாக்கல்’ என்ற சொல்லாடலே உருவானது.
உயர்கல்வியின் நோக்கமும் தேவையும் மாறியதும் இந்தப் புள்ளியில்
இருந்துதான். கல்வியை ஒரு பண்டமாக கருதத் தொடங்கிய பின்னர், ஒரு சர்வதேசச்
சந்தைப் பொருளாகப் பாவித்ததுடன், உலகம் முழுவதும் விற்று வாங்கும் பொருளாக
ஆக்குவதில் தடைகள் ஏதும் இல்லாத சூழல் உருவாகவும் உலகமயமாக்கல்
விரும்பியது. அதன் விளைவாகத்தான் உலக வர்த்தக அமைப்பின் கீழ் உயர்கல்வி
கொண்டுவரப்பட்டது.
இரு வகைச் செயல்பாடுகள் மூலம் கல்வி வர்த்தகம் செய்ய இயலும். ஒன்று நம்
நாட்டு மாணவர்கள், வளர்ந்த நாடுகளுக்குப் படிக்கச் செல்வது; மற்றொன்று
வளர்ந்த நாடுகளின் உயர்கல்வி நிறுவனங்கள் இந்தியாவுக்குள் வருவது. இதன்
மூலம் இந்தியப் பணம் வெளிநாடுகளுக்குச் செல்லவே செய்யும். இதைத் தடுக்க
முயலும் ஆலோசனையே மனிதவள மேம்பாட்டு அமைச்சக முன்மொழிவில் கூறப்பட்டுள்ள
கல்வி சர்வதேசமயமாக்கல் என்ற முன்மொழிவுகள்.
அடிப்படையில், வளர்ந்த நாடுகள் தங்கள் வருவாயை உயர்த்திக்கொள்ளும் திட்டம்
இது. இதை இந்தியா எப்போதும் சாதகமாக மாற்ற இயலாது. அமெரிக்கா, இங்கிலாந்து,
ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, சீனா, ஜெர்மனி போன்ற நாடுகளுக்கே நம்
மாணவர்கள் அதிகம் படிக்கச் செல்கிறார்கள். இதில் சீனா தவிர எந்த
நாட்டுக்கும் மாணவர்கள் செல்வதைத் தடுக்க முடியாது. ஏனெனில், மேற்படி
நாடுகளுக்குச் செல்லும் மாணவர்களில் பெரும்பாலானோர் பொருளாதார வசதி
உள்ளவர்கள். மேலும், அந்த நாடுகளில் உள்ள புகழ்வாய்ந்த பல்கலைக்கழகங்களும்
இந்தியாவுக்கு வரப்போவதில்லை. இது ஆட்சியாளர்களுக்கும்
முன்மொழிபவர்களுக்கும் தெரிந்தே இருக்கலாம். இருந்தும் அந்த
முன்மொழிவுகளைப் பற்றிப் பேசுவது, உயர்கல்வியில் 100% அந்நிய நேரடி
மூலதனத்துக்கு வழிவகுக்கவும், உலக வர்த்தக அமைப்பின் ஷரத்துக்களை
நடைமுறைப்படுத்தவும்தான்!
ஆசிரியர் மேம்பாடு
முன்பருவக் கல்வி முதல் பள்ளிக் கல்வி முடியும் வரை பணியாற்றும்
ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்தப் பயிற்சிகள்
போதுமானவையா, அதன் மூலம் பலன் உண்டா என்பது வேறு விஷயம். ஆனால், உயர்கல்வி
கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எந்தவிதப் பயிற்சியும் இல்லை. ஆய்வியல்
நிறைஞர், முனைவர் போன்ற படிப்புகள் ஆய்வு சார்ந்தவைதானே தவிர மாணவர்கள்
உளவியல் சார்ந்ததோ, கற்றல் கற்பித்தல் முறைகள் சார்ந்தவையோ அல்ல. இந்தக்
குறைபாட்டுக்கான தீர்வாக ஏற்ற முன்மொழிவுகள் இந்த ஆவணத்தில் இல்லை.
ஆசிரியர் தேர்வு, பதவி உயர்வு போன்றவற்றை ஆராய்ந்து அறிய ஒரு குழு
நியமிக்கப்படும் என்றும், அக்குழு வெளிநாடுகளுக்குச் சென்று ஆய்ந்து
அறிந்து அறிக்கை பெற்று அதன் அடிப்படையில் பரிந்துரை செய்யும் என்றும்
கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள நடைமுறைகளில் ஊழல், அரசியல் தலையீடுகளைக்
கட்டுப்படுத்தினாலே இதற்குத் தீர்வு காண முடியும்.
கல்விக்கான நிதி
கோத்தாரி கல்விக் குழு பரிந்துரைத்த 6% கல்விச் செலவை எட்டியே தீருவோம்
என்று சூளுரைத்தது போல் கூறியது சுப்ரமணியம் குழு. ஆனால், அந்தத் தொனி மாறி
6% எட்ட முயற்சி மேற்கொள்ளப்படும் என்கிறது தற்போதைய ஆவணம்.
உயர்கல்விக்கான அதிக நிதி தேவைப்படுவதால், இனி உயர்கல்வி நிறுவனங்கள்
துவங்கப்பட மாட்டாது என அறிவிக்கிறது இவ்வறிக்கை. தற்போதுள்ள நிறுவனங்கள்
மட்டுமே விரிவுப்படுத்தப்படுமாம். அதுவும் எப்படி? தொண்டுள்ளம் கொண்டோரைத்
தேடிக் கண்டுபிடித்து நிதி சேகரிப்பது, முன்னாள் மாணவர்களிடம் நிதி வசூல்,
கட்டணங்களை அதிகரிப்பது, பொது-தனியார் பங்கேற்புக்கு வழிவகை செய்வது,
ஆகியவற்றின் மூலம் சரிசெய்து கொள்ளவேண்டும் எனும் பரிந்துரை
முன்வைக்கப்பட்டுள்ளது. கல்வியில் தனியார்மயம் தோன்றி கால் நூற்றாண்டு
ஆகிவிட்டது. ஆனால் எந்த ஒரு அரசும் ஏற்கெனவே இருந்த புகழ்வாய்ந்த
நிறுவனங்களின் மீது கை வைத்ததில்லை. மத்திய அரசின் புதிய கொள்கை அமலானால்
ஐஐடி, ஐஐஎம், ஜேஎன்யு போன்ற நிறுவனங்களுக்கும் இந்த கதிதான்.
கல்வியில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள இனி தனியாருக்கு வரிச்சலுகை உண்டு.
அந்நிய நேரடி மூலதனம் வரவழைக்கப்படும். தனியார்மயத் தீமைகளுக்கு மேலும்
தனியார்மயமே தீர்வு. எப்படி இருக்கின்றன பரிந்துரைகள்!
தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தவிர 30 சங்க ஆசிரியர்கள், மாணவர்கள்,
கல்வி செயல்பாட்டாளர்கள் என ஒன்றிணைந்து சுமார் ஒரு இலட்சம் பேரை
உள்ளடக்கிய கல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் ‘மன் கி பாத்’ உரை உடனடியாக மொழியாக்கம் செய்யப்பட்டு 19
மொழிகளில் வெளிவருகிறது. ஆனால் கல்விக் கொள்கைக்கான உள்ளீடுகளைத் தமிழ்
உள்ளிட்ட மொழிகளில் வெளியிட பெரும் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது.
அப்போதும்கூட 11 மொழிகளில்தான் இந்த ஆவணம் வெளியாகியிருக்கிறது.
அரசு ஊழியர்கள் குறிப்பாணைக்குப் பதில் கோருவது போல் உடனடியாகக் கருத்துக்
கூற வேண்டும் என்ற அதிகாரத் தொனி வேறு! கடும் போராட்டத்துக்குப் பின்னர்
செப்டம்பர் 15 வரை அரசின் ஆவணத்தின் மீது கருத்துக் கேட்புக்கான மீதான கால
அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இந்தியக் கல்வி வரலாற்றில் ஒரு கல்விக் கொள்கை உருவாக்கத்துக்கு ஆரம்ப
நிலையிலேயே இத்தனை எதிர்ப்புகள் எழுந்ததில்லை. இந்தப் புதிய கல்விக்
கொள்கையால் நன்மைகளைவிட தீமைகளே அதிகம் என்று பார்க்கப்படும் சூழலில்,
இக்கொள்கை முற்றிலும் திருத்தி எழுதப்பட வேண்டும். அனைத்து மாநிலங்களையும்
உள்ளடக்கிய, விளிம்புநிலை மக்களையும் சிறுபான்மை மக்களையும் அங்கமாகக்
கொண்ட தரமான கல்வியாளர் களோடு புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை
உருவாக்க வேண்டும். இன்றைய அவசரத் தேவை இதுதான்!
- மாநில அமைப்பாளர், கல்வி உரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பு
‘புதிய கல்விக் கொள்கை- ஆசிரியரும் மாணவரும் குற்றவாளிக் கூண்டிலா?’ என்ற நூலின் ஆசிரியர்.
தொடர்புக்கு: tnsfnmani@gmail.com
No comments:
Post a Comment